உடல் வலிமையை விட மன வலிமை தான் நம்மை மீட்கும்! அஸ்வின் மனைவி வேண்டுகோள்

இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின், இந்த வருட ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். திடீரென, அவர் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.

தன் வீட்டில் உள்ளவர்கள் பத்து பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர்களுடன் இருக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவரது மனைவி ப்ரீத்தி ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஒரே வாரத்தில் எனது குடும்பத்தில் 6 பெரியவர்கள், 4 சிறியவர்கள் உட்பட 10 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. குடும்பத்தில் உள்ள இளையவர்கள் மூலம் அனைவருக்கும் தொற்று ஏற்பட்டது தெரியவந்துள்ளது. அனைவரும் வெவ்வேறு வீடுகள், மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

மிக மோசமான வாரம் இது. தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோர் 3 பேரில் ஒருவர் குணமடைந்துள்ளார். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் தடுப்பூசி எடுத்துக்கொள்வது மட்டுமே இந்தத் தொற்றுக்கு எதிராகப் போராட ஒரே வழி.

உடல் வலிமையைவிட மனவலிமை மட்டுமே இந்த நோயிலிருந்து நம்மை மீட்கும். 5லிருந்து 8 நாட்கள் மிகக் கடினமானதாக இருந்தது. உதவி செய்யப் பலர் இருந்தனர், உதவினர். ஆனால், யாரும் உங்களுடன் இருக்க முடியாது. நீங்கள் தனிமையில் இருப்பீர்கள். ஏனென்றால் இந்த நோய் உங்களைத் தனிமைப்படுத்தி வைக்கும் நோய் ஆகும். தயவுசெய்து உரியவரை அணுகி உதவி தேடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *