இந்தியா கொரோனாவுடன் போராடும்போது ஐபிஎல் போட்டி நடத்துவது அவசியமா?
கொரோனா என்ற ஒற்றைச் சொல் உலக நாடுகள் அனைத்தையும் பயத்தில் உறைய வைத்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவுக்கு எதிரான போரில் தொடர்ந்து போராடி வருகின்றன. கடந்த ஆண்டு சீனாவின் வுகான் மாகாணத்திலிருந்து பரவிய கொரோனா இன்று உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் பரவியுள்ளது. பலரும் தங்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அன்பிற்குரியவர்களை இழந்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா தினசரி பரவல் 3 லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லியில் கொரோனாவால் இறப்பவர்களை மயானங்களில் எரிக்க இடமில்லாமல் தவிக்கும் அவல நிலை தொடர்கிறது.
நாடே இக்கட்டான சூழலில் சிக்கித் தவிக்கும் போது ஐபிஎல் போட்டிகள் நடத்துவது சரியா என்ற எண்ணம் எழுந்துள்ளது. ஐபிஎல் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக அமைந்துள்ளது. ஐபிஎல் போட்டிகளுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்களுக்கு அனுமதியளிக்காமல் நடைபெற்றது. இதனால் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர். இந்த ஆண்டும் கொரோனா பரவலால் ரசிகர்களுக்கு அனுமதியின்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் நிலையைப் பார்த்து அனைத்து உலக நாடுகளும் உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளன. ஆனால் இந்தியாவில் இருந்து கொரோனாவின் தீவிரத்தை நேரடியாக கண்ணால் பார்க்கும் நம்மில் பலர் ஐபிஎல் போட்டிகளில் மூழ்கியிருப்பது வேதனையளிப்பதாக உள்ளது. மக்களின் உயிரைக் காட்டிலும் கிரிக்கெட் பார்ப்பது முக்கியமா என்ற கேள்வியும் எழுகிறது. ஐபிஎல் போட்டிகள் இப்போது இல்லாவிட்டாலும் அடுத்த ஆண்டு கூட பார்த்துக் கொள்ளலாம் ஆனால் நாள்தோறும் இறப்பவர்களை நம்மால் என்ன செய்தாலும் திரும்ப உயிருடன் கொண்டு வர முடியாது.
ஐபிஎல் வீரர்கள் முறையாக கொரோனா விதிமுறைகளை பின்பற்றுகிறார்கள் மற்றும் மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பிறகு எப்படி அவர்களை கொரோனா பரவலுக்கு குறைகூறுவது என்கிற நியாயமான கேள்வியும் எழுகிறது. இங்கு கவனிக்க வேண்டியது கொரோனா பரவலுக்கு ஐபிஎல்-ல் விளையாடும் வீரர்களை யாரும் குறைகூறவில்லை. ஆனால் ஐபிஎல் போட்டிகளால் ஈர்க்கப்பட்டிருக்கும் ஒருவரால் எப்படி கொரோனா குறித்தும் அதனால் இறப்பவர்கள் குறித்தும் சிந்திக்க முடியும். அவர்களுக்கு தங்களுக்கு பிடித்தமான அணி ஐபிஎல் கோப்பையை வெல்லுமா? இந்த போட்டியில் யார் ஜெயிப்பார்கள்? அடுத்த போட்டியில் யார் ஜெயிப்பார்கள்? என்ற யோசனையில் ஆழ்ந்திருப்பவர்கள் இந்தியாவின் இக்கட்டான நிலை குறித்தும் கொரோனாவால் இறப்பவர்கள் குறித்தும் அவர்களுக்கு சிந்திக்க நேரமிருக்க வாய்ப்பில்லை.
இந்த கொரோனா பேராபத்துக் காலத்தில் ஐபிஎல் மற்றும் இதர கேளிக்கைகளுக்கு அதிக கவனம் கொடுக்காமல் அரசுடன் இணைந்து பொறுப்பாக இருக்கும் பட்சத்தில் கொரோனாவுக்கு எதிரான போரில் எளிதில் வெல்ல முடியும். தற்காலிகமாக ஐபிஎல்-க்கு ஓய்வு கொடுத்து கொரோனாவுக்கு எதிரான போரில் வெல்வோம்.