கொரோனா குறித்த ஆய்வுக்கு சீனா எதிர்ப்பு!

சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளுக்கும் பரவி மக்களின் உயிரை பறித்துவருகிறது.
இந்த கொரோனா வைரஸ் பரவல் குறித்து கண்டறிய சீனாவின் வைராலஜி இன்ஸ்டியூட் உள்ளே உலக சுகாதார நிறுவனத்தை ஆய்வு மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், சீன அரசாங்கம் கொரோனா வைரஸ் சீனாவில் இருந்துதான் பரவி இருக்க வேண்டுமா, வேறு நாட்டில் இருந்தும் கூட பரவியிருக்கலாம் என கூறி ஆய்வு மேற்கொள்ள தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
உலக சுகாதார நிறுவனம் மட்டுமல்லாமல், அமெரிக்காவும் வைரஸ் எங்கிருந்து பரவியது என்பதை கண்டறிவதில் தீவிரம் காட்டி வருகிறது.
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் இந்த வைரஸ் பரவல் குறித்து 90 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அந்நாட்டு சுகாதார துறைக்கு உத்தரவிட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சீன ஆய்வு கூடத்திலிருந்து கொரோனா வைரஸ் வெளியேறியதாக கூறுவது பொது அறிவுக்கு பொருந்தாத வதந்தி என சீன தேசிய சுகாதார ஆணையத்தின் துணை அமைச்சர் ஜெங் யெய்க்சின் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இவ்வாறு வைரஸ் பரவல் எங்கிருந்து தோன்றியது என ஆலோசிக்கும் வேளையில் கொரோனா மூன்றாவது அலை உலக நாடுகளை என்ன செய்யப்போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.