கேரளாவைக் கலங்கடிக்கும் கொரோனாவும் ஜிகாவும்… மருத்துவர்களுக்கு மன அழுத்தமா?

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையால் ஏற்படும் பாதிப்பு கடந்த சில மாதங்களாக அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது அதன் பாதிப்பு மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது.
அனைத்து மாநிலங்களிலும் தனித்தனியாக கடைபிடிக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள், ஊரடங்கு போன்ற காரணங்களால் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து காணப்படுகிறது.
ஆனால், கேரளாவில் இன்னும் அதன் பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை. தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 12000 முதல் 15000 என்ற அளவில் உள்ளது.
இதனுடன், கொசுக்களால் பரவும் ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பும் கேரளாவில் பரவி வருவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இருந்தாலும், ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த சூழ்நிலைகளால் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் பணிச்சுமை அதிகமாகி மன அழுத்தத்தால் பாதிக்கப்படலாம் என மருத்துவ நிபுணர்கள் குழு எச்சரித்துள்ளது.
மாநிலத்தில் வைரஸ் தொற்று பாதிப்புகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுத்து வருவதாகவும், சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கேரளாவிற்கு உதவுவதற்காக மத்திய நிபுணர்கள் குழு அங்கு முகாமிட்டுள்ளது.