ரஷ்யாவில் மீண்டும் களமிறங்கும் கொரோனா!

உலக நாடுகளை கொரோனா பரவல் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. உலகின் பல நாடுகளிலும் கொரோனா இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது ரஷ்யாவில் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ரஷ்யாவில் ஒரே நாளில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஊரடங்கு, தடுப்பூசி உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஜனவரி மாத இறுதியில் அங்கு நோய் தொற்று வெகுவாக குறைந்திருந்தது. இந்நிலையில், பிப்ரவரி 1 ஆம் தேதிக்குப் பின் ஒரே நாளில் புதிதாக 17, 262 பேருக்கு அங்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மதுபான விடுதிகள், ஹோட்டல்கள், தேநீர் விடுதிகள் ஆகியவற்றில் குறைந்த அளவிலான நபர்களுக்கே அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தொழிற்சாலை, கல்வித்துறை மற்றும் பொது போக்குவரத்து துறைகளில் பணியாற்றுபவர்கள் உடனடியாக தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.