இங்கிலாந்தை மிரட்டும் டெல்டா வகை கொரோனா!

கொரோனா பரவல் உலகையே புரட்டிப் போட்டுள்ளது. கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடித்த போதிலும், அந்த தடுப்பூசிகள் உருமாற்றம் அடைந்த கொரோனாவை கட்டுப்படுத்துவதில் செயல்திறன் குறைந்து காணப்படுகின்றன.
குறிப்பாக இந்தியாவில் உருவான டெல்டா வகை கொரோனா வைரஸ் உலகெங்கிலும் பரவி வருகிறது. இதன் மீது தடுப்பூசியின் செயல்திறன் குறைந்து காணப்படுகிறது.
இந்த உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் தீவிரமாக பரவி வருகிறது.
கடந்த மே மாதத்தில் இருந்து அங்கு பரவிவரும் டெல்டா வகை கொரோனாதான், அங்கு ஏற்பட்டிருக்கும் கொரோனா பரவல் அதிகரிப்புக்கு 50 சதவிகிதம் காரணமென அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.
பிரதமர் போரிஸ் ஜான்சனின் ஊரடங்கு முயற்சியால், படிப்படியாக இங்கிலாந்தில் குறைந்து வந்த கொரோனா, மீண்டும் வேகமெடுத்து, 3 மாதங்களில் இல்லாத அளவில் அதிகரித்துள்ளதாகவும், அதில் மே மாதத்தின் பிற்பகுதியில் ஏற்பட்ட கொரோனா பரவலுக்கு, டெல்டா வைரஸ் கொரோனாவுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாகவும் ஆய்வில் உறுதியாக தெரியவந்துள்ளது.