கொரோனாவால் பெருகி வரும் மருத்துவக் கழிவுகள்!

கொரோனா பரவல் இந்த உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றின் பாதிப்புகளைவிட அந்நோய்க்கு சிகிச்சை பெறுவோர் மூலம் சேரும் மருத்துவக் கழிவுகளால் ஏற்படும் தீங்கு மிக அதிகம். ஏற்கனவே இந்த பூமி, பல்வேறு விதமான கழிவுகளால் மாசுபட்டு வரும் சூழலில், தற்போது பெரும் சவாலாக உருவெடுத்திருப்பது கொரோனா மருத்துவக் கழிவுகள். குறிப்பாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மலைபோல் குவியும் இக்கழிவுகளை சுத்திகரிக்க போதிய வசதிகள் இல்லை.
இந்நிலையில், மருத்துவக் கழிவுகளை அகற்ற சுத்திகரிப்பு மையம் அமைக்க வேண்டுமென சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒரு கொரோனா நோயாளியின் படுக்கையிலிருந்து நாளொன்றுக்கு ஒரு கிலோ வரை கழிவுகள் சேருகின்றன.
தமிழ்நாட்டில் இவ்வாறு சேரும் கழிவுகளின் எடை 288.7 டன் ஆகும். இவற்றுடன் சாதாரண நோயாளிகளின் மருத்துவக் கழிவுகளையும் சேர்க்கும்போது 340 டன் அளவுக்கு குவிகின்றது.
இந்நிலையில், மருத்துவக் கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.