நான்கு மகன்களையும் கொரோனாவிற்கு பறி கொடுத்த துக்கத்தில் இறந்த தாய்!

தமிழகத்தில், கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.
முதல் அலையை விட இரண்டாம் அலையில், மக்கள் குடும்பம் குடும்பமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் குன்னூரில் வசிக்கும் மூதாட்டி பாப்பம்மாளின்(70) நான்கு மகன்களுக்கும், ஒரு மருமகளுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.
இதனால், அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், மே 9 ஆம் தேதி இவரது மூன்றாவது மகனும் அவரது மனைவியும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
தொடர்ந்து, மே 19 ஆம் தேதி இரண்டாவது மகனும், மே 20 ஆம் தேதி முதல் மகனும், மே24 ஆம் தேதி கடைசி மகனும் அடுத்தடுத்து இறந்துள்ளனர்.
இந்தத் தகவல்கள் அனைத்தும் மூதாட்டிக்குத் தெரிவிக்கப்படாமலே இருந்துள்ளது. தன்னைப் பார்க்க வரும் மகன்கள் இவ்வளவு நாட்களாக வராதது குறித்து மூதாட்டி அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார்.
அப்போது தான், அவரின் நான்கு மகன்களும் ஒரு மருமகளும் கொரோனாவால் இறந்த விஷயம் மூதாட்டிக்குத் தெரியவந்துள்ளது. இதனையறிந்து, தன் நான்கு மகன்களையும் இழந்த சோகத்தில் மூதாட்டியும் நேற்று (27.5.2021) இரவு திடீரென இறந்துள்ளார்.
நான்கு மகன்களுடன் சேர்ந்து தாயும் இறந்துள்ளது அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.