டெல்லியில் திங்கள் கிழமை முதல் ஊரடங்கு தளர்த்தப்படும் – அரவிந்த் கெஜ்ரிவால்
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
தலைநகர் டெல்லியில், தினசரி கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் சென்றதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் கொரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளதால் வரும் திங்கள் கிழமை முதல் ஊரடங்குகள் தளர்த்தப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த 24 மணி நேரத்தில், 1,100 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனையடுத்து, பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் ஆலோசனை நடந்தது. கடந்த ஒரு மாதத்தில் கிடைத்த பலன்களை இழந்து விடக்கூடாது, என்பதற்காக டில்லியில் உள்ள ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படும். கொரோனாவில் தப்பித்த மக்கள், பசியால் இறந்து விடக்கூடாது என்பதற்காக தளர்வு அளிக்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது.
தினக்கூலிகள் மற்றும் அவர்கள் பணிபுரியும் தொழிற்சாலைகள் ஆகியவற்றை மனதில் வைத்து தளர்வுகள் அளிக்கப்பட உள்ளது. தினக்கூலிகளாக இருப்பவர்கள் பெரும்பாலும் கட்டுமானம் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ளனர். வரும் திங்கட்கிழமை முதல், தொழில்பூங்கா பகுதியில் உற்பத்தி மையங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.
குறிப்பிட்ட பகுதிகளில், கட்டுமான பணிகள் நடக்க அனுமதிக்கப்படும்.ஒவ்வொரு வாரமும் நிபுணர்கள் மற்றும் பொது மக்களின் கருத்துகள் ஆலோசனை செய்யப்படும். தளர்வுகள் படிப்படியாக அமல்படுத்தப்படும்.
தொற்று மீண்டும் அதிகரிக்கும் பட்சத்தில், தளர்வு அளிக்கப்படுவது நிறுத்தி வைக்கப்படும். இதனால், அனைவரும் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். கட்டாயத்தின் பேரில் ஊரடங்கை அமல்படுத்தவில்லை. ஆனால், வேறு வழியில்லை. இதனால், மக்கள் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது” என மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.