ரஷ்யாவில் இருந்து நேரடியாக டெல்லிக்கு வரும் தடுப்பூசிகள்!

இந்தியாவில், பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி தான் ஒரே தீர்வு என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இதனால், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனாலும், இந்தியாவில் தொடர்ந்து தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் சுழல் உருவாகியுள்ளது.
மாநிலங்களுக்குப் போதுமான தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்குவதில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது. தலைநகர் டெல்லியில், அண்மையில் ஒரு தடுப்பூசி கூட இல்லாததால் தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டன.
இதனால், மாநில அரசு சார்பில் தடுப்பூசிக்கான உலகளாவிய டெண்டர்கள் விடப்பட்டது. ஆனால், அந்நிறுவனங்கள் மத்திய அரசுக்கு மட்டுமே தடுப்பூசிகளை வழங்க முடியும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ”டெல்லியில் தடுப்பூசி பற்றாக்குறையை போக்க ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி நிறுவனம் தடுப்பூசிகள் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது. எவ்வளவு தடுப்பூசிகள் என கூறப்படவில்லை” என, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.