இந்த 6 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறையவில்லை…முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை தீவிரமாக வீசி வருகிறது.
தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. கொரோனா அதிகம் பாதித்த மாவட்டமாக இருந்து வந்த சென்னையில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகின்ற போதிலும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை.
குறிப்பாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள, கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த ஆறு மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக, முதல்வர் ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்களுடன் விவாதித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நோய் பரவல் அதிகம் உள்ள பகுதிகளைக் கண்காணித்து, அப்பகுதிகளில் போதிய பரிசோதனையை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், மற்ற நான்கு மாவட்டங்களில் 18 முதல் 44 வயதுடைய அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்திட செய்ய வேண்டும் எனவும் ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.