கொரோனா ஆடும் ஐ.பி.எல். மேட்ச் -கோவி.லெனின்!

ஊரடங்குக்கு முதல் நாள் கடைகள் திறந்திருக்கும் என்று அரசு அறிவித்தது. அதையடுத்து, மளிகை கடைகளிலும் காய்கறிக் கடைகளிலும் மக்கள் கூடியதும், காய்களின் விலை தாறுமாறாக விற்கப்பட்டதும் கொரோனா இரண்டாம் அலையைவிட பெரிய அதிர்ச்சி அலையை உருவாக்கியது.

அத்தியாவசியத் தேவைக்கானப் பதற்றம் உருவாகும்போது அது சார்ந்த வணிகமும் பெருகும் என்பது வழக்கமானதுதான். அதேநாளில், துணிக்கடைகளிலும் நகைக்கடைகளிலும் கூடிய கூட்டம்தான் எதிர்பாராதது. மூன்றாவது அலையின் வருகைக்கு பட்டுக்கம்பளம் விரித்து வரவேற்பதுபோல இருந்தது.

தனி மனித இடைவெளியைக் கட்டுப்பாடுகளாலும் கண்காணிப்புகளாலும் நிறைவேற்றிட முடியும். தனி மனித விருப்பங்களைக் கட்டுப்படுத்தி வைக்க முடியாது. பேரிடர் சூழலிலும் அப்படியே பழகிவிட்டோம். அதன் விளைவுதான் ஊரடங்குக்கு முந்தைய நாள் துணிக்கடை-நகைக்கடைகளில் அலை மோதிய பெருங்கூட்டம். ஊரடங்குக்குப் பிறகு நடைபெறும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்குப் போகும்போது அணிந்து கொள்ளலாம் என்பதுகூட மக்களின் விருப்பமாக இருக்கலாம். அல்லது வாட்ஸ்ஆப் வீடியோ கால், ஜூம் மீட்டிங் போன்றவற்றில் ஜொலிப்பாக இருக்கட்டும் என்பதுகூட அவர்களின் விருப்பமாக இருக்கக்கூடும்.

வீட்டிலிருந்தபடியே வேலை செய்யப் பழகிவிட்ட இளைஞர்களுக்கு, ஊரடங்கு மனச்சோர்வை ஏற்படுத்தும்போது, பொழுதுபோக்கு தேவைப்படுகிறது. “இந்த ஐ.பி.எல். மேட்ச்சையும் கொரோனாவைக் காரணம் காட்டி நிறுத்திட்டாங்க’‘ என்று வாட்ஸ்ஆப்பில் சோக ஸ்மைலியுடன் வருத்தப்பட்டிருந்தார் ஓர் இளைஞர். அவருக்குத் தெரியவில்லை, கொரோனா இரண்டாவது அலையே ஒரு ஐ.பி.எல். மேட்ச்தான்.

ட்வெண்ட்டி20 மேட்ச்சுக்குரிய விறுவிறுப்புடன் வேகமாக பரவ ஆரம்பித்தது நோய்த் தொற்று. 25ஆயிரம், 30 ஆயிரம், 35 ஆயிரம்னு ஸ்கோர் ஏறிக்கிட்டே இருக்கு. இதை சேஸ் பண்ணுறதுதான் அரசாங்கத்துக்கான டார்கெட். அதாவது மருத்துவ சிகிச்சையால் நோய்த்தொற்றை எதிர்கொண்டு கட்டுப்படுத்துற ரிஸ்க்கான டார்கெட்தான் புதிதாகப் பதவியேற்ற மு.கஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு.

ஃபீல்டில் இறங்குறதுக்கு முன்பாகவே பேட், க்ளவுஸ், பேடு, கேப் எல்லாம் சரியா இருக்கணும். அது போலத்தான் நிவாரணத் தொகை 2000 ரூபாய். அப்புறம், மாஸ்க், சானிடைசர் பற்றிய விழிப்புணர்வு. தட்டுப்பாடான சூழலிலும் தடுப்பூசி முகாம் எல்லாமும்.

ஆட்டம் ஆரம்பமானது. ஓபனிங் பேட்ஸ்மென்களுக்கு இவ்வளவு பெரிய ஸ்கோரை சேஸ் பண்ணுற அளவுக்கு ரன் ரேட் மெயின்டெய்ன் பண்ணுறது ரொம்ப சிரமமா இருந்தது. ஆம்புலன்ஸ் இல்லை, பெட் இல்லை. ஆக்சிஜன் இல்லை, ஐ.சி.யூ வார்டு இல்லை என எல்லாமே நெருக்கடிதான். ரன் ரேட்டை உயர்த்த நினைச்சா, டெத் ரேட் உயர ஆரம்பிச்சிடிச்சி. அதாவது, விக்கெட் விழ ஆரம்பிச்சிடிச்சி.

‘தல’ டோனி மாதிரி, ஆட்சியின் கேப்டன் தளபதியும் பேட்டிங் ஆர்டரை கொஞ்சம் மாற்றினார். ஆக்சிஜன் உற்பத்தி அதிகமானது. அதற்கான சிலிண்டர்கள் இறக்குமதியானது. இந்திய ஒன்றிய அரசின் கோட்டாவிலிருந்து கூடுதலாக ஒதுக்கீடு பெறப்பட்டது.

“(wide ball) வைடு பாலை வீணாகத் தொட்டு அவுட் ஆகவேண்டாம்“ என அறிவுறுத்துவதுபோல ரெம்டெசிவர் மருந்துக்காக க்யூவில் நிற்கவேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டது. ஹாஸ்பிடல் வாசலில் ஆம்புலன்ஸ்கள் வரிசையாக நிற்கும் அவலம் குறைந்தது. பெட் கிடைக்காமல் திண்டாடுவது கொஞ்சம் மட்டுப்பட்டது. ஆனால், கொரோனா கையில்தானே செட்டிங் த டார்கெட். அதனால், இந்த ரன்ரேட் போதவில்லை. இன்னும் கூடுதலாகத் தேவைப்பட்டது.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்துகொண்டிருக்க, சரியான ஆர்டரில் பேட்ஸ்மென்களை களமிறக்க வேண்டியது கேப்டனின் வேலையானது. டைம் அவுட்டில் ஃபீல்டுக்குள் வந்து பேட்ஸ்மென்களுக்கு அட்வைஸ் செய்வது போல, கேப்டனே War Roomக்கு வந்து நேரடியாக உரையாடினார்.

பேட்ஸ்மென்கள் சரியான கேப் பார்த்து பந்தை அடிக்க வேண்டும். காலியாக உள்ள இடம் பார்த்து அடிக்க வேண்டும். அதற்கு வசதியாக தளர்வில்லாத ஊரடங்கு போடப்பட்டது. ஊரடங்கின் மூன்றாவது, நான்காவது நாட்களில், கொரோனா தொற்றின் எண்ணிக்கை மெதுவாகக் குறைந்து, ரன் ரேட் லேசாகக் கூடியது.

தொடக்கத்தில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள் தாக்குப் பிடித்து நிற்பதால், ரன் ரேட் மெயின்டெய்ன் ஆகும் வாய்ப்புள்ளது. ஆனாலும், மொத்தம் 20 ஓவர்தான். அதற்குள் தேவையான ரன் ரேட்டுடன் இலக்கை நெருங்கி வின்னிங் ஷாட் அடிக்க வேண்டும். 21வது ஓவரெல்லாம் கிடையாது. அதுபோல ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே போக முடியாது. அப்புறம், கேலரியில் இருக்கும் ரசிகர்களான பொதுமக்களே foul play எனக் கடுப்பாகி விடுவார்கள். அதனால் power play பாணியில் ஆடியாக வேண்டும்.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள் களத்தில் நிற்கிறார்கள். சில நேரங்களில் கடைசி ஆர்டரில் பேட் பிடிக்கும் பவுலர்களும்கூட தங்கள் விக்கெட்டைக் காப்பாற்றிக் கொண்டு, கவனமாக ரன் எடுப்பார்கள். அதுபோல அரசாங்கத்தின் தடுப்பூசி இயக்கத்தினால் கிடைக்கும் பலமும் பலனும் சேர்ந்து, முடிந்த அளவு ரன் ரேட்டை உயர்த்தி டெத் ரேட்டை கட்டுப்படுத்தியாக வேண்டும்.

அவரு அப்படி விளையாடினாரு, இவரு இத்தனை பவுண்டரி அடிச்சாரு, இன்னொருத்தரு செஞ்சுரி போட்டாரு. அப்புறம், போட்ட பந்தையெல்லாம் சிக்சரா அடிக்கிறாரு என்பதெல்லாம் அந்தந்த ஓவருக்கான உணர்ச்சிக் கிளர்ச்சிகள். எல்லாம் அடித்து லாஸ்ட் ஓவர் லாஸ்ட் பந்து வரை இழுத்தடித்தும் வின்னிங் ஷாட் அடிக்காமல் போய்விட்டால் அவ்வளவு நேரம் கைதட்டிய ஆடியன்ஸ் கழுவி ஊற்ற ஆரம்பித்துவிடுவார்கள்.

ஊரடங்கு என்பது ட்வெண்ட்டி 20 மேட்ச். அதன் கால அளவுக்குள் கொரோனா பரவல்-டெத் ரேட் இவற்றை கண்ட்ரோல் பண்ணுகிற அளவுக்கு சிகிச்சை என்ற ரன் ரேட்டை உயர்த்தி ஜெயிக்க வேண்டும். தல தோனியின் ஸ்பெஷாலிட்டி, வின்னிங் ஷாட். வானத்தில் பந்தை பறக்க வைக்கும் அந்த ஹெலிகாப்டர் ஷாட்டை அரசாங்கத்தின் கேப்டன் மு.க.ஸ்டாலின் விரைந்து அடிக்கும் வகையில், ஊரடங்கை அதிக காலம் நீட்டிக்காமல் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தியாக வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *