ஊடகவியலாளர்களுக்கு ஊக்கத்தொகையும், இழப்பீட்டுத் தொகையும் முதல்வர் அறிவிப்பு!

கொரோனா தொற்றுக் காலத்தில் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்குச் சேவை புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், மக்களுக்கு 24 மணி நேரமும் அயராது உழைத்து பொதுமக்களுக்குத் செய்திகளைக் கொண்டு சேர்க்கும் ஊடகவியலாளர்களையும் முன்களப் பணியாளர்களாக முதலமைச்சர் அறிவித்தார். மேலும், பல இடங்களில் செய்தியாளர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருவதால் அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையையும், அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் ஊக்கத் தொகையையும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து, தமிழக அரசு சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கிடையே ஊடகவியலாளர்கள் பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் மக்களுக்குச் சரியாகக் கொண்டு சேர்ப்பதிலும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றி வருகிறார்கள்.

மக்களுக்கும், அரசுக்கும் ஒரு இணைப்புப் பாலமாக இக்காலகட்டத்தில் சிறப்பாக இயங்கிவரும் இவர்களது பணியினை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் காலமுறை இதழ்களில் பணிபுரியும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் (அரசு அங்கீகார அட்டை / மாவட்ட ஆட்சியர் வாயிலாக வழங்கப்பட்ட அடையாள அட்டை / இலவசப் பேருந்துப் பயண அட்டை போன்ற ஏதேனும் ஒரு வகையில் அரசால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்) ஆகியோருக்கு சிறப்பு ஊக்கத் தொகையினை அதிகரித்து வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆட்சியின்போது, ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொலை 3 ஆயிரம் ரூபாய் ஆகும். இதனைத் தற்போது அதிகரித்து வழங்கக் கோரி பெறப்பட்ட கோரிக்கையினைப் பரிசீலித்த முதல்வர், ஊடகவியலாளர்களுக்கான ஊக்கத் தொகையினை ரூபாய் 3 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 5 ஆயிரமாக அதிகரித்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அதேபோன்று, கடந்த ஆட்சியின்போது பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணிபுரியும் அரசு அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் கரோனா நோய்த் தொற்று காரணமாக இறக்க நேரிட்டால், அவர்களது வாரிசுதாரர்களுக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இதனையும் அதிகரித்து வழங்கக் கோரி ஊடகவியலாளர்கள் சார்பாக அளிக்கப்பட்ட கோரிக்கையினைப் பரிசீலித்து, அதனை ரூபாய் 10 லட்சமாக அதிகரித்து வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பத்திரிகைத் துறை மற்றும் அனைத்து ஊடகத் துறை நண்பர்களும் இந்த நோய்த் தொற்றுக் காலத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் தங்கள் பணியினை கவனமுடன் மேற்கொள்ள முதல்வர் இத்தருணத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *