தேவைப்பட்டால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் – முதலமைச்சர்

தமிழகத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்புப் பணிகளை முதலைமைச்சர் மு.க. ஸ்டாலின் பல இடங்களில் நேரில் ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில், இன்று திருவள்ளூர் நேயம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முதலமைச்சர் ஆய்வு செய்தார்.
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர், “தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கால் 2 நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. முழுப்பயனும் இன்னும் 3 நாட்களில் தெரிய வரும். எனவே, மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் தொற்றை தடுக்கலாம். திமுக ஆட்சிக்கு வந்ததும் சராசரியாக தினமும் 7,000 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தினசரி பரிசோதனை 1.64 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 2.24 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும். சட்டமன்றக் குழு உறுப்பினர்களின் ஆலோசனைப்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.