இனி அனைத்தும் மத்திய அரசு கையில் தான்!
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக பதினெட்டு வயதைக் கடந்த அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
மேலும், மத்திய அரசு மாநிலங்களுக்குத் தேவையான தடுப்பூசிகளை வழங்குவதில் தாமதம் நிலவி வருகிறது. இதனால், தமிழகம், பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான் , உத்தரபிரதேசம் மற்றும் உத்தராகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்கள் தடுப்பூசிகளை வாங்குவதற்கான உலகளாவிய டெண்டர்களை வெளியிட்டுள்ளன .
ஆனால், மாடர்னா நிறுவனம் தடுப்பூசிகளை நேரடியாக மாநிலங்களுக்கு வழங்கமாட்டோம் என பஞ்சாப் அரசிடம் தெரிவித்தது. அதுபோல பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்கள் மத்திய அரசுடன் மட்டுமே தொடர்புகொள்வோம் என தெரிவித்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
எனவே, மாநிலங்களால் தனியாக தடுப்பூசிகளைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இனி, மத்திய அரசு தான் விரைவாக தடுப்பூசிகளை இறக்குமதி செய்து மாநிலங்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.