ஆபத்தான கரும்பூஞ்சை நோயின் அறிகுறிகள்
இந்தியா முழுவதும் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கும் அதே வேளையில், கரும்பூஞ்சை எனப்படும் நோயும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்களை இந்த நோய் அதிகளவில் பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நோய்க்குக் காரணமான கருப்பு பூஞ்சை காற்றில் கலந்து இருக்கிறது. மூக்கின் சைனஸ் பகுதியில் உள்ள மியூகஸ் திரவத்தை பாதித்து கண் மற்றும் மூளை என வேகமாகப் பரவக் கூடியது. இது, கொரோனா மாதிரி தொற்று நோய் இல்லை ஆனால், நோய் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்குள் வேகமாகப் பரவக் கூடியதால், இறப்பு ஏற்படும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது.
தற்போது, இந்த நோய்க்கான அறிகுறிகள் வெளியிடப்பட்டுள்ளன. கொரோனா தொற்றில் இருந்து மீண்ட பிறகும் மூக்கடைப்பு, மூச்சு விடுவதில் சிரமம், காய்ச்சல், உடல் வலி, பார்வை குறைபாடு ஆகியவை இருந்தால் மருத்துவமனை சென்று முறையாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும், இந்த கருப்பு பூஞ்சைகள் வயல் மற்றும் தோட்டங்களில் சாதாரணமாக இருக்கக்கூடியது. அதனால் தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அப்படியே வெளியே சென்றாலும் இரட்டை முகக்கவசம் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.