சேலத்தில் முதல்வர் ஆய்வு

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சில மாவட்டங்களில் தினசரி பாதிப்பின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இவ்வாறு தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் நேரடியாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார்.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் தனது ஆய்வைத் தொடங்கியுள்ளார். தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வரும் நிலையில், ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், சேலம் இரும்பாலையில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் இன்று திறந்து வைத்தார்.
அவருடன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், மின்சாரத்துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியர் எஸ். கார்மேகம், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆர். ராஜேந்திரன் மற்றும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி முதல்வர் மருத்துவர் வள்ளி சத்தியமூர்த்தி ஆகியோருடன் சுகாதாரத்துறை அதிகாரிகளும் உடனிருந்தனர்.