வேலூரில் மருத்துவர்களுக்கு வேலை வாய்ப்பு!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா இரண்டாம் அலை பரவலைத் தவிர்க்க மருத்துவர்கள் தங்கள் உயிரையும் மதிக்காமல் சேவை செய்து வருகின்றனர். ஆனாலும், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளதால் மருத்துவர்களின் தேவை அதிகமாக உள்ளது.
எனவே, கூடுதல் மருத்துவர்கள் மருத்துமனைகளில் பணியமர்த்தப்படுவர் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, வேலூர் மாவட்ட மருத்துவமனைகளில் பணிபுரிய விரும்பும் மருத்துவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வேலூர் மாவட்டத்தில் கரோனா 2-ம் அலை அதிகரித்துள்ளது. கரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் படுக்கைகள் எண்ணிக் கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, மருத்துவமனைகளில் மருத்துவம் சார்ந்த பணிகளை மேற்கொள்ள தகுதி வாய்ந்த மருத்துவர்கள் உடனடியாக தேவைப்படுகின்றனர். வேலூர் மாவட்டத்தில் மருத்துவர் பணிக்கு தகுதி வாய்ந்த எம்பிபிஎஸ்/எம்டி கல்வித்தகுதி உடைய மருத்துவர்கள் துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மாவட்ட ஆட்சியரகம், சத்துவாச்சாரி, வேலூர் என்ற மேற்கண்ட அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம்.
மருத்துவர் பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியுள்ள மருத்துவருக்கு மாத ஊதியமாக ரூ.60 ஆயிரம் வழங்கப்படும். தகுதி வாய்ந்த மருத்துவர்கள் தங்களது பயோடேட்டாவை மாவட்ட ஆட்சித் தலைவரின் வாட்ஸ் -அப் எண்ணான 94981-35000 என்ற எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம்” என, கூறப்பட்டுள்ளது.