தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்தில் இறப்பு விகிதம் குறையும் – அமைச்சர் சேகர் பாபு

தமிழகத்தில், கொரோனா இரண்டாவது அலையில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஆக்ஸிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், ஆக்ஸிஜன் வசதியுள்ள படுக்கைகளை மருத்துவமனைகளில் கூடுதலாக அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் பள்ளியில், 104 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை முகாமை அமைச்சர் சேகர் பாபு துவங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசு மூலமாகவும், தன்னார்வலர்கள் மூலமாகவும் ஆயிரத்து 690 ஆக்சிஜன் செறிவூட்டிகளை மாநகராட்சி பெற்று, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கி வருகிறது.
மேலும், கொரோனா பாதிப்பு விவகாரத்தில் அரசு வெளிப்படைத் தன்மையுடன் தான் இருக்கிறது. தற்போது அதிகரித்து வரும் கரும்பூஞ்சை நோய்க்குத் தேவையான மருந்து கைவசம் உள்ளது. அதனால், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்.
இன்னும் ஒரு வாரத்தில் தமிழகத்தில் இறப்பு விகிதம் குறையும்” எனக் கூறியுள்ளார்.