முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்!

”தமிழகம் கொரோனா இரண்டாவது அலையில் சிக்கியிருக்கிறது. இதனால், நிதி நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. அதனைச் சரி செய்ய பொதுமக்கள் அனைவரும் தங்களால் முடிந்த பணத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்க வேண்டும்” என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனையடுத்து, பொதுமக்கள் அனைவரும் தங்களால் முடிந்தளவு பணத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அளித்து வருகின்றனர். அதன்படி, தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனைவரும் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவித்துள்ளார்.
இதனால், அனைத்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் ஒரு நாள் ஊதியத்தைக் கணக்கிட்டு, அவர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என கருவூலத்துறைக்கு, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.