தாயின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவமனையில் பணிபுரியும் இளம் மருத்துவர்….நெகிழ வைக்கும் சம்பவம்!

கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த தாயின் உயிரை காப்பாற்றியதற்காக, தாய்க்கு சிகிச்சையளித்த அதே அரசு மருத்துவமனையில் இலவச சேவை புரிகிறார் இளம் மருத்துவரொருவர். இவரின் செயல் பலரையும் நெகிழவைத்துள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த இளம் மருத்துவர் ஹர்ஷா சத்தீஸ்கர் மாநிலத்தில் கைநிறைய சம்பளத்திற்கு மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.
சில நாட்களுக்கு முன்னர் ஹர்ஷாவின் தாய் ராஜலட்சுமி க்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து மருத்துவர் ஹர்ஷா தனக்குத் தெரிந்த தனியார் மருத்துவமனைகளை தொடர்பு கொண்டார்.
பல தனியார் மருத்துவமனைகளில் உதவி கேட்டும் ஹர்ஷாவின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
தாய் ராஜலட்சுமியின் நிலையை சோதித்து பார்த்தவர்கள், அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் உள்ளார் என்றுக் கூறி கைவிரித்துள்ளனர். ஒரு மருத்துவராக இருந்துகொண்டு தனது தாய்க்கே சிகிச்சை அளிக்க முடியாத விரக்தியில் இருந்து மருத்துவர் ஹர்ஷா, இறுதியாக மாவட்ட அரசு மருத்துவமனை மூத்த மருத்துவர் ராஜேஸ்வரியை தொடர்புகொண்டு விஷயத்தை பகிர்ந்துகொள்ள, இறுதியில் அரசு மருத்துவமனையில் தாய் ராஜலட்சுமியை சேர்த்துள்ளார்.
அங்கு 10 நாட்கள் அவர் சிகிச்சை மேற்கொண்டார். ஒவ்வொரு நாளும் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் இருந்துள்ளது. குறிப்பாக ஆக்சிஜன் அளவு மேம்பட்டு இறக்கும் தருவாயில் இருந்த ராஜலட்சுமியின் உயிர் காப்பற்றப்பட்டுள்ளது. ஆபத்தான நிலையிலிருந்த அவரை காப்பாற்ற உதவியிருக்கிறார்கள் அந்த அரசு மருத்துவமனையின் சுகாதாரப் பணியாளர்கள். அவர்களின் பணிக்கு நன்றி செலுத்தும் வகையில் இந்த 10 நாட்களும் மருத்துவர்களுடன் இணைந்து மருத்துவ பணியை இலவசமாக பார்த்து வருகிறார் மருத்துவர் ஹர்ஷா.
மருத்துவர் ஹர்ஷாவின் இந்த செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
மேலும் மருத்துவர் ஹர்ஷா இங்கு பணிபுரிவதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. இந்த அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனையில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது.
அந்தப் பணிச்சுமையை போக்கும் விதமாக மருத்துவர் ஹர்ஷா சேவையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.