ஒரே நாளில் 50 மருத்துவர்களை காவு வாங்கிய கொரோனா!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் வேகம் சுனாமி போல உள்ளது. இதிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக முன்களப் பணியார்களும், மருத்துவர்களும் தங்களது உயிரைப் பணயம் வைத்து போராடி வருகின்றனர்.
இந்தியாவில் மொத்தம் 12 லட்சம் மருத்துவர்கள் இருப்பதாக கூறப்பட்டாலும் அதில், 3.5 லட்சம் பேர் மட்டுமே இந்திய மருத்துவ சங்கத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்களின் விவரங்களை இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் மட்டும் 244 மருத்துவர்கள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மே 16 ஆம் தேதி மட்டும் 50 மருத்துவர்கள் இறந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது. இதுவரை அதிகபட்சமாக பீகாரில் 69 மருத்துவர்களும், உத்தரப்பிரதேசத்தில் 34 பேரும், டெல்லியில் 27 பேரும் தங்கள் உயிரிழந்துள்ளனர்.
நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவருக்குக் கூட கொரோனா தீவிரமானால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை தான். டெல்லியைச் சேர்ந்த டாக்டர் அனஸ் முஜாஹித் என்ற 25 வயது இளம் டாக்டரும், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்ற 90 வயதான மூத்த டாக்டரும் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இன்னும் பதிவு செய்யப்படாத மருத்துவர்கள் இருப்பதால் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும் என்றும் இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் கே கே அகர்வால் கூறியுள்ளார்.