நான் கோமியம் குடிக்கிறேன், எனக்கு கொரோனா வரவில்லை…. பாஜக எம்.பி பேச்சு!

நான் தினமும் கோமியம் குடிக்கிறேன் அதனால் எனக்கு கொரோனா பரவல் வரவில்லை என போபால் தொகுதி பாஜக எம்.பி பிரக்யா சிங் கூறியுள்ளார்.
போபாலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், நானும் பசுவின் சிறுநீரை தினமும் குடிக்கிறேன். அதனால்தான் நான் எந்த மருந்தையும் எடுத்துக்கொள்வதில்லை. தற்போது வரை எனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை. அனைத்து மக்களும் நாட்டு மாடுகளை வைத்திருக்க வேண்டும். அனைவரும் அரசமரம், ஆலமரம், துளசி உள்ளிட்டவைகளை நட்டு வளர்க்க வேண்டும். அதை நட்டு நீங்கள் வளர்க்கும் போது உங்களுக்கு அதிகப்படியான ஆக்சிஜன் தேவை இருக்காது. இந்த முறை போபாலில் ஒரு கோடி மரங்கள் நடப்படும். அதற்கு தேவையான தண்ணீர் வசதி தண்ணீர் டேங்குகள் மூலமாக வழங்கப்படும் என்றார்.
இதே போல் சில தினங்களுக்கு முன்னால் குஜராத்தில் சிலர் மாட்டு சாணத்தையும், அதன் கோமியத்தையும் உடலில் பூசிக்கொண்டு யோகா செய்து பின்னர் பாலில் குளித்தனர். இவ்வாறு செய்வதன் மூலம் கொரோனா குணமடைவதாக அவர்கள் நம்புகின்றனர்.
ஆனால் இவ்வாறு செய்வது கொரோனாவை குணப்படுத்தும் என எந்த ஒரு அறிவியல் பூர்வமான சான்றுகளும் இல்லை என மருத்துவர்கள் விமர்சித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.