கள்ளச் சந்தையில் தொடர்ந்து விற்பனையாகும் ரெம்டெசிவர்….இதுவரை 24 பேர் கைது!

கொரோனா சிகிச்சையில் ரெம்டெசிவர் உயிர் காக்கும் மருந்தாக பார்க்கப்படுகிறது. அதனால் மருத்துவர்களும் அதனையே பெரிதும் பரிந்துரைக்கின்றனர்.

இதன் மூலம் ரெம்டெசிவருக்கான தேவை அதிகரித்துள்ளது. அதனால் தமிழக அரசு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இம்மருந்தினை விநியோகம் செய்து வந்தது. இதனையடுத்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் மக்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு படையெடுத்தனர்.

இந்நிலையில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக அரசு மருந்து விற்பனையை நேரு ஸ்டேடியத்திற்கு இடமாற்றம் செய்தது.

தமிழக அரசு மருந்து விற்பனையை சரிவர செய்து வருகின்ற போதும் ஒரு சிலர் கள்ளச்சந்தையில் இம்மருந்தினை கொள்ளை லாபத்திற்கு விற்று வருகின்றனர். இதனால் பலருக்கும் தேவையான நேரத்தில் மருந்து கிடைக்காமல் அங்கும் இங்கும் அலை மோதுகின்றனர்.

கள்ளச்சந்தையில் இம்மருந்தினை விற்பவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் பலரின் மீது வழக்கு பதிவு செய்து கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லையில் இந்த மருந்து அரசால் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் சிலர் பதுக்கிவைத்தும், கள்ளச்சந்தையில் பெற்றும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தும் வந்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் மருத்துவர்கள், மருந்து பதுக்கியவர்களை அடுத்தடுத்து கைது செய்தனர். அந்த வகையில் சென்னையில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 234 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *