ஆம்புலன்ஸ்களாக மாறும் கால் டாக்சிகள்! சென்னையில் மாற்று ஏற்பாடு
கொரோனா தொற்றின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் தான் இருக்கிறது. குறிப்பாக சென்னையில் தினசரி பாதிப்பின் வேகம் கவலை அளிப்பதாக உள்ளது.
கொரோனா நோயாளிகளை மருத்துமனைகளுக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி இன்றியமையாததாக இருக்கிறது. அரசின் ஆம்புலன்ஸ் வசதி அனைவரும் கிடைப்பதில்லை. அதனால், மக்கள் தனியார் ஆம்புலன்ஸ்களை பயன்படுத்துக் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் தனியார் ஆம்புலன்ஸ்கள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்துவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்திருந்தனர். இதனால், மக்களின் கவலையைப் போக்க தனியார் ஆம்புலன்ஸ்களுக்கான புதிய கட்டணைத்தை அறிவித்து அரசாணை வெளியிட்டது.
ஆனாலும், தொற்றால் ஏற்படும் பாதிப்பு அதிகளவில் உள்ளதால் ஆம்புலன்ஸ் வாகனங்களின் தேவையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு சென்னையில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் 250 கால் டாக்சிகள் ஆம்புலன்ஸ்களாக மாற்றப்படவுள்ளது.
முதல்கட்டமாக 50 டாக்சிகள் ஆம்புலன்ஸ்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்த சேவையை, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்.இந்த வகை ஆம்புலன்ஸ்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமையில் இருப்பவர்களை சிகிச்சை மையங்களுக்கு அழைத்து செல்ல பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.