குழந்தைகளுக்கும் மாஸ்க் கட்டாயம்! ஒடிசா அரசு அறிவிப்பு

2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் முகக் கவசம் கட்டாயம் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில், கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் காட்டுத்தீயையே மிஞ்சும் அளவுக்கு உள்ளது. கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் ஊரடங்கு போன்ற விதிமுறைகளை விதித்து மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும், ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தொற்று பரவலின் வேகம் குறைந்திருப்பதாக மத்திய அரசும் தெரிவித்துள்ளது. ஊரடங்கின் போதும் மக்கள் முகக்கவசம் அணிவது போன்ற பாதுகாப்பு நடைமுறைகளை முமுமையாக பின்பற்ற வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் குழந்தைகள், இளம்பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியில் வருகையில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதார மற்றும் பெண்கள் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.
முக்கியமாக, 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் அவர்களது பெற்றோர்கள் முகக்கவசம் அணிவித்து தான் வெளியில் அழைத்து வர வேண்டும் என கூறியுள்ளது.