கொரோனா நிவாரண நிதியாக திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களின் ஒரு மாத ஊதியம்
கொரோனா நிவாரண நிதிக்கு திமுகவின் எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தங்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள் என முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரத்தில் நிதி நெருக்கடியையும், மருத்துவ உபகரணங்களுக்கான நெருக்கடியையும் எதிர்கொண்டு வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதனால், முதல்வரின் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தங்களால் முடிந்த நிவாரணத்தை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். அதுமட்டுமல்லாமல், வெளிநாடு வாழ் தமிழர்களையும் நிவாரணம் வழங்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.
திமுக அறக்கட்டளை சார்பில், முதல்வரின் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, பல தலைவர்களும், திரைப் பிரபலங்களும், பொது மக்களும் நிவாரணம் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுகவின் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என திமுகவின் தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.