உயிர்காக்க உதவுங்கள்! உலகத் தமிழர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
தமிழகத்தில் தற்போது, கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், நிதி நெருக்கடியைத் தடுக்க முதல்வர் நிவாரணம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி, அரசியல் தலைவர்களும் பொது மக்களும் தங்களால் முடிந்த நிவாரணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்து வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் உலகத் தமிழர்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் உதவி கேட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், “
கொரோனா என்கிற பெருந்தொற்று மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இதை வென்று நாம் மீண்டு எழுவோம் என்பதை நிச்சயமாக தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் தற்போது இரண்டு முக்கியமான நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. ஒன்று கொரோனா என்கிற பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள மருத்துவ நெருக்கடி. இன்னொன்று நிதி நெருக்கடி.
இந்த இரண்டையும் சமாளிக்கும் முன் முயற்சிகளை தமிழக அரசு செய்து வருகிறது. கரோனா என்கிற பெருந்தொற்றை கட்டுப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும், தொற்றுக்கு உள்ளானவர்களை காக்கும் பணியில் கண்ணுங்கருத்துமாக தமிழக அரசு தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறது. கரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க மக்களுக்கு நிவாரண உதவிகளை அரசு வழங்கி வருகிறது.
தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்க மருத்துவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகிறார்கள். கரோனா முதல் அலையை விட இரண்டாம் அலை மிக மோசமானதாக உள்ளது. இதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது. கரோனாவின் வீரியத்தை உணர்ந்து மருத்துவமனைகள், படுக்கைகள், மருந்துகள், ஆக்சிஜன் வசதிகள், தடுப்பூசிகள் ஆகிய உள்கட்டமைப்பை இன்னும் அதிகப்படுத்தியாக வேண்டும்.
படுக்கைகள், மருந்துகள், ஆக்சிஜன் ஆகியவற்றின் இருப்பை அதிகரிக்க முழு வேகத்தில் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு கூடுதல் பணியாளர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திடீர் அவசர செலவீனங்களுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குகள் என நான் வேண்டுகோள் வைத்தேன். கருணை உள்ளத்துடன் பலரும் வழங்கி வருகிறார்கள். பலரும் நிதி திரட்டி வருகிறார்கள்.
அமெரிக்கவாழ் தமிழ் தொழில் முனைவோர் சங்கம், வட அமெரிக்க வாழ் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு, அமெரிக்க தமிழ் மருத்துவர்களின் கூட்டமைப்பு, கலிஃபோர்னியா தமிழ் அகாடமி போன்ற அமெரிக்காவின் முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து தமிழ் அமைப்புகள் இம்முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் தமிழக மக்களுக்கு உதவுவதை பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள் தாய் தமிழகத்தை மறக்கவில்லை. மறக்க முடியாது என்பதன் அடையாளம் தான் நிதி திரட்டும் இத்தகைய நிகழ்வுகள். தனக்காக மட்டும் வாழாமல் ஊருக்காக, உலகத்துக்காக வாழும் உங்கள் உயர்ந்த உள்ளத்தின் வெளிப்பாடுதான் இந்த முன்னெடுப்பு ஆகும். மிகவும் சிக்கலான, நெருக்கடியான இந்த நேரத்தில் தமிழ்நாட்டுக்கு மாபெரும் உதவி செய்ய வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டு மக்களை நாங்கள் மறக்கமாட்டோம் என்று நீங்கள் காட்டியுள்ளீர்கள், நாங்களும் உங்களை மறக்கமாட்டோம். மருத்துவ நெருக்கடியும், நிதி நெருக்கடியும் சூழ்ந்துள்ள இந்த நேரத்தில் மக்களைக்காக்கும் மகத்தான பணியில் மக்கள் தங்களைத்தாங்களே ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். அதிலும் குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் தமிழ் மக்களைக் காக்கும் முயற்சிக்கு தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்க வேண்டும்.
ஈகையும், இரக்கமும், கருணையும், பரந்த உள்ளமும் கொண்ட தமிழ் மக்கள் அனைவரும் தமிழக அரசின் கரோனா தடுப்பு முயற்சிக்கு கைகொடுக்கும் வகையில் நிதி அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவை கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.
ஆக்சிஜன் பயன்படுத்தக்கூடிய படுக்கைகள், தடுப்பூசி மருந்துகள், கரோனா தடுப்புக்கு தேவையான பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். இந்த விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும். நீங்கள் அளிக்கும் தொகைக்கு வருமான வரியில் விலக்கும் அளிக்கப்படும். நீங்கள் அளிக்கும் நிதி கரோனாவை முற்றிலும் ஒழிக்க உதவி கரமாக இருக்கும். தாராளமாக நிதி வழங்குங்கள், நன்றி” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.