இதெல்லாம் கொரோனாவ குணப்படுத்துமா… ஆதாரம் இருக்கா!

நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து மத்திய,மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது.
கொரோனாவை குணப்படுத்த இதுவரை எந்த ஒரு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் குஜராத் மாநிலத்தில் மாட்டுச் சாணமும், கோமியமும் கொரோனாவை குணப் படுத்த பயன்படுவதாக நம்பப்படுகிறது.
இதனால் பலர் தங்களின் உடல்களில் மாட்டுச் சாணத்தையும், கோமியத்தையும் பூசிக்கொண்டு யோகா பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் கொரோனா குணம் அடைவதாகவும் நம்புகின்றனர். மேலும் உடற்பயிற்சி முடிந்த பிறகு பால் மற்றும் வெண்ணெயில் குளித்து பின்பு பசுக்களை கட்டியணைத்து வழிபடுகின்றனர்.
ஆனால் இவை எதுவும் கொரோனாவை குணப்படுத்தும் என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இது குறித்து இந்திய மருத்துவ சங்கத் தலைவரும் மருத்துவருமான டாக்டர் ஜெ.ஏ.ஜெயலால் கூறும்போது, கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை மாடுகளின் கழிவுகள் கொடுக்கிறது என்பதற்கு இதுவரை எந்த அறிவியல் பூர்வமான ஆதாரங்களும் இல்லை. இது முற்றிலும் நம்பிக்கையை அடிப்படையாகக்கொண்டது. இதனால் உடல்நலகோளாறுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இது மட்டுமன்றி விலங்கிடம் இருந்து மனிதனுக்கு பிற நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. அங்கு மக்கள் குழுக்களாக கூடுவதால் கொரோனா தொற்று பரவும் என்றும் தெரிவித்துள்ளார்.