கொரோனா தடுப்புப் பணிகளை மக்கள் இயக்கமாக்கி செயல்பட வைப்போம் – கி.வீரமணி

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு வருகிற மே 10 முதல் மே 24 வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

நாளை மறுநாள் (10.5.2021) முதல் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என்றும், அது மே 24 ஆம் தேதிவரை நீடிக்கும் என்றும் தமிழக முதலமைச்சர், கொரோனா கொடுந்தொற்றின் 2 ஆம் அலை வீச்சின் வேகத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற இந்த ‘கசப்பு மருந்தினை’ நம் மக்களுக்கு வேண்டுகோளாக விடுத்திருப்பது நமக்காக, நம் உயிரைக் காக்க – நம்மால் நம் உறவுகளுக்கோ, நண்பர்களுக்கோ, பொதுவான தொடர்பாளர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற கடமை கலந்த பொறுப்புணர்வு காரணமாகவேயாகும்!

இதனையும், மற்ற தேவையான கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிப்பதை ஏதோ அரசு போட்ட ஆணையாகக் கருதாமல், நம் மக்கள் நமக்கு நாமே விதித்துக் கொண்ட சுய கட்டுப்பாடு என்ற உணர்வு மேலோங்க கண்டிப்பாகக்  கடைப்பிடித்தல் அவசரம், அவசியம்!

கூட்டணி கட்சித் தோழர்கள், அரசியல் கட்சி நண்பர்கள் – பொதுவானவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல்,  தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல், அடிக்கடி சோப்புப் போட்டு கை கழுவுதல், தனி நபர் இடைவெளி முதலியவற்றை கடைப்பிடிக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒரு மாபெரும் பிரச்சார மக்கள் இயக்கமாக  நாம் அனைவருமே நம்மை மாற்றிக் கொள்ளல், இந்த நெருக்கடியான காலகட்டத்தில் மிகவும் தேவையான சிகிச்சை – மருந்து வழங்குதல் போல. தேவையற்று எவரும் – அனுமதிக்கப்பட்டவர்கள்கூட – நடமாடத் தேவையில்லை.

வாய்ப்புள்ளவர்களும், அமைப்புகளும் உதவி தேவைப்படுபவர்களுக்கு உணவு மற்றும் பல உதவிகளை செய்ய முன்வரவேண்டும்.

மக்களாட்சியில் மக்கள் இயக்கம் மலரட்டும்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
8.5.2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *