தமிழகத்திற்கு 1.5 கோடி தடுப்பூசிகள் வாங்க ஏற்பாடு

தமிழகத்தில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தற்போது வரை 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும் தான் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

மே 1 ஆம் தேதி முதல் 18 வயது நிரம்பியவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க 1.5 கோடி தடுப்பூசிகளை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு செய்திக் குறிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “இந்தியாவிலேயே அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்த முதல் மாநிலம் தமிழ்நாடு. கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தமிழ்நாடு அரசால் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது, 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் இலவச தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை (27.04.2021), 55.51 இலட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், வரும் மே 1-ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேல் 44 வயதுவரை உள்ளவர்களுக்கு ஏற்கனவே அறிவித்தவாறு, இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள தேவையான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கென, முதற்கட்டமாக 1.5 கோடி தடுப்பூசிகள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC ) மூலமாக கொள்முதல் செய்து வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.” எனக் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *