கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்குதான் தீர்வா..? நல்லான் இராமசாமி!
கொரோனா எனும் கொடிய தீ நுண்மியின் இரண்டாவது அலை உலக நாடுகளில் தீவிர மடைந்துள்ளது. மாபெரும் வல்லரசுகள் என்று மார்தட்டிக்கொள்ளும் வளர்ந்த நாடுகள் கூட கொரோனாவைக்கட்டுப்படுத்த வகை தெரியாமல் திகைத்து நிற்கிறது.
இந்தியாவிலும் தீ நுண்மியின் தாக்கம் உச்சம் தொட்டுள்ளது. நாட்டில் பல்வேறு மாநிலங்களில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளர் மத்திய-மாநில அரசுகள் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகளில் மேலதிக கவனம் செலுத்தி வருகின்றன.உலகின் பொருளாதாரத்தை படுகுழியில்தள்ளியதோடு மனிதகுலத்தின் வாழ்வாதாரங்களைச் சின்னா பின்னமாக்கிய கொரோனா தீ நுண்மி, எங்கிருந்து தொடங்கியது. எப்படிபரவியது. இதற்குக்காரணமானவர்கள் யார் ?
என்கிற முழு உண்மைகளை இன்னும் தெள்ளத்தெளிவாய் அறிந்து கொள்ள பொது சமூகத்திற்கு வாய்ப்பில்லாமல் போனது துரதிஷ்டம் 2020 பிப்ரவரி 17 ல் தொடங்கி அவ்வாண்டின் நவம்பர் தொடக்கம் வரை பல்வேறு வடிவிலான ஊரடங்குக் கட்டுப்பாடுகளால் மக்கள் பாதுகாப்பாக இருந்த போதிலும். தங்களின் அன்றாடவாழ்வை நடத்திச்செல்வதற்கு சாதாரண மற்றும் நடுத்தரப்பிரிவினர் பட்ட இன்னல்கள் வர்ணிக்க இயலாதவை, மத்திய-மாநில அரசுகளிடமிருந்து கொஞ்சம் அரிசியும் பருப்பும் கிடைத்ததே தவிர போதிய நிதியுதவி கைவரப்பெறாததால் ஜனங்கள் துயரங்களில் தத்தளித்தனர்.ஏற்கெனவே பணமதிப்பிழப்பு., வேலையின்மை, மோசமானவரிவிதிப்பு முறை சிறு தொழில்கள்முடக்கம், உள்ளிட்ட காரணங்களால் வருமானம் இன்றி அல்லல்பட்டவர்கள் கொரோனாவின் முதல் அலையிலேயே சுருண்டு விழ ஆரம்பித்துவிட்டனர், அப்போதே பட்டினிச்சாவுகளும் நிலவின,ஊடகங்களும் மத்திய-மாநில அரசுகளும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் காட்டிய அக்கறையும் வேகமும். மக்களுடைய அன்றாட வாழ்வின் சிரமங்களைக் குறைப்பதில் காட்டாமல் போனது பெரும்சோகம்.
இது இரண்டாவது அலை, உலகமென்னும் ஒரே கூறையின் கீழ் கூட்டுச்சமுதாயமாய் வாழ்ந்த மனிதர்கள் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், முகக்கவசம் அணிவோம், கைகளைச் சோப்புப் போட்டுக் கழுவுவோம். சமூக இடைவெளியைக் கடைபிடிப்போம் என்பது நமது வாழ்வின் பாடமாகியுள்ளது , நெருக்கமான இடைவெளிகளின் மூலமே எல்லாத் தருணங்களிலும் அன்பைப் பரிமாறிக் கொள்ள வேண்டியுள்ளது. இன்னும் எத்தனை காலத்திற்கு இது நடக்கும் ?
இப்போது மறுபடியும் ஊரடங்கு !பள்ளிக்கூடம் போகாவிட்டால் கூட குழந்தைகளின் பெற்றோர்களிடம் பணம் கறக்கும் தனியார் பள்ளிகளைப் போல கொரோனா பரவல் இல்லாத இடங்களில்-ஊர்களில் கூட எதற்காக ஊரடங்கு?
முதல் அலையின் போது மக்கள் நலனை முன்னிட்டு ஊரடங்கை அமல்படுத்தியதில் ஒரு வகையான நியாயம் இருந்தது, இன்றுதான் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கென்று சிலவகை தடுப்புசிகளை கண்டு பிடித்ததோடு ஆளுக்குத் தகுந்தாற் போல விலை நிர்ணயமும் செய்துவைத்துள்ளீர்களே.
மறுபடியும் எதற்காக ஊரடங்கு நடைமுறை? சில மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் மரணங்கள் நிகழ்கின்றன தமிழகம் மருத்துவத் துறையில் உலக அளவில் முன்னணியில் இருக்கிறது உலகத்தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள தலைசிறந்த மருத்துவ மனைகளைக் கொண்டுள்ள தமிழகத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை நமது தேவைக்கு போதுமானதை வைத்துக்கொண்டு வெளி மாநிலங்களுக்கு உதவும் அளவுக்கு தமிழகத்தில் ஆக்ஸிஜன் கையிருப்பு உள்ளது.
தமிழகத்தின் மூலை முடுக்குகள் எங்கும் சுகாதாரக் குழுக்களும், மருத்துவ மையங்களும் உள்ளன. அவற்றின் மூலம் போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தி கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு வகை தேடாமல் ஊரடங்குகளை கொண்டுவருவதில் அக்கறை காட்டுவது ஏன்?இது போன்ற மக்களின் கேள்விகளுக்கு பதில் இருக்கிறதா?கடைகளில் உக்காந்து சாப்பிடக்கூடாது. பார்சல்தான் வாங்கச் சொல்றாங்க. நாங்க என்ன வீதியில் உட்கார்ந்தா சாப்பிடுவது? கடை வேலைக்குப் போகும் ஆதரவற்ற பெண்மணி ஒருவரின் இந்த கேள்வி அரசாங்கத்தின் காதுகளுக்கு எட்டப் போவதில்லை.
கர்ணன் மாதிரி ரெண்டு மூன்று படங்க நல்லா போவுதுசார் இன்னும் பத்து நாள் விட்டிலிருந்தா போட்ட காசை எடுத்திருப்பாங்க. எங்களுக்கும் சாப்பாட்டுக்கு வழி கிடச்சிருக்கும்…. பொழப்பைக் கெடுத்துட்டாங்க. உதவி இயக்குநர் ஒருவரின் கண்ணீர் ததும்பும் குரல் இது.நாலு டேபிள் உள்ள உணவுக் கடையில் டேபிளுக்கு ஒருவர் அமர்ந்து சாப்பிட அனுமதி கொடுத்திருக்கலாம். 50 சதவீதம் வேண்டாங்க. 30 சதவீதம் பேர் உட்கார்ந்து படம் பாருங்கன்னு சொல்லி இருக்கலாம்.
தியேட்டர்களை எதுக்கு மூடனும். டாஸ்மாக் கடையை ஏன் மூடலை? அங்கு கொரோனா பரவாதா.? சலூன் கடைகளைக்கூட மூடச்சொல்ல வேண்டியதில்லை டோக்கன் முறை மூலம் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை வாடிக்கையாளர்களை அனுமதிக்கலாம், என்ன அரசாங்கம் போங்க, எல்லாரும் வீட்டில் இருந்தா எப்படி பிழைக்க முடியும்? ஓட்டு எண்ணும் நாளுக்கு முன்னாடியும் பின்னாடியும் எதுக்கு ஊரடங்கு? மூட்டை சுமக்கும் தொழிலாளி ஒருவரின் கேள்விக்கணைகள் நம்மை நிலைகுழைய வைக்கிறது.கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தான் தீர்வா?கொஞ்சமாக வேர் பிடித்த சிறு தொழில்கள் மறுபடியும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வருமானத்திற்கு வழிகிடைத்த சந்தோசத்தில் வாழ்ந்த மக்கள் மீண்டும் வருமான இழப்பை சந்திக்கும் துயரம் நிகழவிருக்கிறது. சாதாரணமக்கள் ஒருவித பயத்தில் வீடுகளில் தங்களை இருத்திக்கொண்டுள்ள காட்சி நெஞ்சைப் பிசைவதாக இருக்கிறது.வேலையில்லாத படித்த இளைஞர்கள். திக்குதிசை தெரியாமல் தடுமாறுவதைக் காணும் போது. ஆளும் வர்க்கத்தின் ஆசைகள் நிறைவேறிவிட்டதாகவே தோன்றுகிறது.சுயசிந்தனை படைத்த இளைஞர்கள். நாங்கள் எதையும் இழக்க மாட்டோம். வாழ்வைத் தேடிப்பயணிப்போம். என்கிறார்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவைக்காட்டி எங்கள் மீது தேச விரோத முத்திரை குத்த முடியாது. என அவர்கள் வெளிப்படையாகவே சொல்கிறார்கள்.வீட்டுச்சிறைவாசம், வேலையின்மை, பணவீக்கம், வருமானம் இழப்பு போன்றவற்றால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்குக்கு பங்கம் வர வாய்ப்புள்ளது தமிழகத்தின் அமைதியை ஆட்சியாளர்களே கெடுத்துவிடக்கூடாது.
கொரோனா காலத்தில் பண வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது நடுத்தரமக்கள் மற்றும் தொழில் துறையினரின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.இந்தியா பிச்சைக்காரர்களும் பாம்பாட்டிகளும் நிறைந்த நாடு என்று வெள்ளையன் சொல்லிச்சென்றான் அன்று, இன்று நீங்கள் மக்களைப் பிச்சைக்காரர்கள் போல் நடத்துவதன் மூலம், மற்றவர்கள் உங்களைப் பாம்பாட்டிகளாக் கருத இடமளித்துவிட வேண்டாம்.அன்பிற்குரிய தலைவர்களே ஓரங்க நாடகத்தின் உணர்ச்சிமிகு வசனங்கள் போல் மனதின் குரலை வெளிப்படுத்தியது போதும், கடிதங்கள் மூலமாகவும் பிரஸ்மீட்டுகள் வாயிலாகவும் தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ளும் போக்கு இனியும் கூடாது, மக்களை வீட்டுச்சிறையில் அடைத்துவைத்து வேடிக்கை பார்க்க வேண்டாம், அவர்களை அடிமைகளாக்காமல் சுதந்திரக் காற்றை சுவாசிக்க அனுமதியுங்கள், அரசின் சட்ட திட்டங்களை கண்காணிப்பு விதிகளை கருணையுடனும் அக்கறையுடனும் மக்களிடம் கொண்டு செல்லுங்கள்.தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளை முழுமையாக பயன்படுத்தி மக்களின் துணையோடு கொரோனாவை தமிழகத்தில் முற்றிலும் இல்லாமல் செய்யுங்கள் நம்மால் முடியும் என நம்புவோம்.கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்குகள் மட்டுமே தீர்வல்ல.
கட்டுரையாளர்: (எழுத்தாளர்- ஊடகவியலாளர்)