நாடு முழுவதும் உருவாகும் புதிய கொரோனா மருத்துவமனைகள்!

கொரோனா பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
நாடு முழுவதும் கோவிட்-19 பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ராணுவ தளவாட நிறுவனங்கள் கொரோனா சிகிச்சைக்கான தற்காலிக மருத்துவமனைகளை நிறுவி வருகின்றன.
கர்நாடகாவின் பெங்களூருவில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், அவசர சிகிச்சைப் பிரிவு, பிராணவாயு மற்றும் செயற்கை சுவாசக் கருவிகளுடன் கூடிய கோவிட் சிகிச்சை மையம், 180 படுக்கைகளுடன் இயக்குகிறது. இந்த ராணுவ பொதுத்துறை நிறுவனமானது, 250 படுக்கை வசதிகளுடன் கூடிய மையத்தை பெங்களூரு நகராட்சி அதிகாரிகளிடம் வழங்கியுள்ளது.
இது போன்று பல மாநிலங்களிலும் ராணுவத் தளவாடங்கள் கொரோனா மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.
ஒடிசாவின் கோராபுட்டில் 70 படுக்கைகள் கொண்ட மையமும், மகாராஷ்டிராவின் நாசிக்கில் 40 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையும் இயங்கி வருகின்றன. உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் 250 படுக்கைகள் கொண்ட கொவிட் சிகிச்சை மையத்தை அமைக்கும் பணியையும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த மையம் மே மாதம் முதல் வாரத்தில் இயங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் மருத்துவப் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையடுத்து இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.