பிச்சை எடுங்க என்ன வேணா பண்ணுங்க! கொதித்தெழுந்த நீதிமன்றம்
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. தலைநகர் டெல்லியில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆக்ஸிஜன் தேவை அதிகரித்து வருகிறது.
இதனால், ஆக்ஸிஜன் தேவையை ஈடு செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல மனுக்கள் டெல்லி உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் அனைத்தும் அவசர வழக்காக எடுக்கப்பட்டு நேற்று விசாரணைக்கு வந்தது.
அந்த மனுக்களின் மீதான விவாதத்தின் போது நீதிபதிகள் விபின் சாங்வி, ரேகா ஆகியோர் அடங்கிய அமர்வு , “டெல்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்த உண்மை நிலவரத்தை மத்திய அரசு ஏன் நம்ப மறுக்கிறது. டெல்லியில் ஆக்ஸிஜன் இல்லாமல் உயிரிழந்துள்ளதை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஆக்ஸிஜன் தேவை தற்போது 5 மடங்காக உயர்ந்துள்ளது. இதை சமாளித்து மக்களைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. இப்படி ஓர் இக்கட்டான நேரத்தில் வேறெங்கெல்லாம் ஆக்சிஜன் இருக்கிறதோ அங்கெல்லாம் பிச்சை எடுங்கள், கடனாகக் கேளுங்கள், இல்லை திருடுங்கள்” என்று கடுமையாக தெரிவித்துள்ளனர்.
இந்த மனுக்களின் மீதான் விசாரணை இன்றும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.