கடமை தவறாத கர்ப்பிணி டிஎஸ்பி…வைரலாகும் வீடியோ!

நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த கொரோனா சூழலில் பலரும் தன்னலம் கருதாமல் மக்களுக்காக பணியாற்றி வருகின்றனர். அப்படி பணியாற்றும் கர்ப்பிணி டிஎஸ்பி ஒருவரின் தன்னலமற்ற பணி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சத்தீஸ்கரில் ஐந்து மாத கர்ப்பிணியான டிஎஸ்பி ஷில்பா சாஹுகொரோனா விதிமீறல்களில் ஈடுபடும் மக்களை நெறிப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் வீடியோ காட்சிகள் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளன.
கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா பேரிடர் பெரிய சோகங்களையும், பல நம்பிக்கைகளையும், உண்மைகளையும், கடமையாளர்களையும் நமக்கு நிறையவே காட்டி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
சத்தீஸ்கரில் உள்ள பஸ்தாரில் உள்ள டான்டேவாடாவில் இருந்துதான் அந்த வீடியோ வெளியாகியுள்ளது. இந்தப் பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், விதிகளை மீறி பொதுமக்கள் வெளியே வரும் நிலையில், அவர்களை பெண் டிஎஸ்பி ஷில்பா சாஹு அறிவுரை சொல்லி அனுப்பி வைத்து வருகிறார். இதனால் இவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.