ஓரே நாளில் 2.61 லட்சம் பேருக்கு கொரோனா!

கொரோனா நாடு முழுவதும் அதிதீவிரமாக பரவி வருகிறது.இதனையடுத்து நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.மேலும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.தொடர்ச்சியாக அதிகரிக்கும் கொரோனாவால் மீண்டும் ஒரு முறை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இன்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் 2.61 லட்சம் பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 18 லட்சத்தை கடந்தது.புதிதாக தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 79 சதவீதம் பேர் மஹாராஷ்டிரா,உத்திர பிரதேசம்,டெல்லியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
தினசரி அதிகரிக்கும் கொரோனாவால் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டருக்கான தேவை அதிகரித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி ஆக்ஸிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடி கடந்த ஆண்டு எவ்வாறு கொரோனாவிற்கு எதிராக வெற்றிகரமாக செயல்பட்டோமோ அதேபோல் இந்த ஆண்டும் கொரோனாவை நம்மால் ஒழிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மத்திய,மாநில அரசுகளும் கொரோனாவை கட்டுபடுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக தொல்லியல் துறைக்கு கீழ் வரும் முக்கிய நினைவுச் சின்னங்களை வருகிற மே 15 வரை மூடி வைக்க உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.இந்த நடவடிக்கையின் மூலம் கொரோனா பரவும் வேகத்தை கட்டுக்குள் வைக்க முடியும்.மேலும்,பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் மிகவும் தீவிர நிலையை அடைந்துள்ளதால் அனைவரும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது மற்றும் தகுதியுடைய அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது ஆகியவற்றை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.