அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் கோயம்பேடு சந்தைகள் மூடல்!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியையும் அரசு வேகப்படுத்தியுள்ளது.
தினசரி கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் அரசு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போது கோயம்பேடு சந்தைகளில் அதிக அளவில் பலரும் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
தற்போது கொரோனா தமிழகத்தில் வேகமெடுத்து வரும் சூழலில் மீண்டும் கோயம்பேடு சந்தைப் பகுதி தொற்று அதிகம் பரவும் பகுதியாக மாறாமல் இருக்க தமிழக அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஏற்கனவே சில்லைரை காய்கறி வியாபாரிகளுக்கு வியாபாரம் செய்ய தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனையடுத்து கோயம்பேடு வியாபாரிகள் இந்த தடையால் அவர்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என தெரிவித்து அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் அவர்களுக்கு காய்கறி விற்பனை செய்ய சில நாட்களுக்கு அரசு அனுமதி அளித்தது.
இந்நிலையில் இன்று அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் கோயம்பேடு சந்தை மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் பெருந்தொற்று பரவும் வேகத்தை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாட்டிற்கு முன்னதாகவே மாதத்தின் 2-வது மற்றும் 4-வது வார ஞாயிற்றுக் கிழமைகளில் கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.