தடுப்பூசிக்கான வயது வரம்பைக் குறைக்க வேண்டும்! பிரதமருக்கு சோனியா கடிதம்

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பும் இரண்டு லட்சத்தைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. மேலும், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது.

பாதிப்பு அதிகமாக உள்ள 11 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். 45 முதல் 60 வயதானவர்களுக்கு மட்டும் தான் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் சோனியா காந்தி தடுப்பூசியின் வயது வரம்பைக் குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், “கொரோனா தடுப்பூசிக்கான வயது வரம்பை 45லிருந்து 25 வயதாக குறைக்க வேண்டும். ஊரடங்கை மீண்டும் அமல்படுத்துவதால் ஏழைகளை மட்டுமின்றி பொருளாதார நடவடிக்கைகளையும் பாதிக்கும். ஊரடங்கால் பாதிக்கப்படும் தகுதியான குடிமகன்களின் கணக்கில் மாதம் ரூபாய் 6 ஆயிரம் செலுத்த வேண்டும். மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவமனை படுக்கைகளின் கடுமையான பற்றாக்குறை பற்றிய செய்திகளைப் படிப்பது மிகவும் கவலை அளிக்கிறது.

தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதை நிறுத்திவிட்டு, உள்நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கொரோனா நெருக்கடியை கணித்தல், மதிப்பீடு மற்றும் நிர்வகிப்பதில் மத்திய அரசு மெத்தனம் காட்டி வருகிறது.

கொரோனா வைரசைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை கேட்காமல், மத்திய அமைச்சர்கள் எதிர்க்கட்சி தலைவர்களை விமர்சனம் செய்கின்றனர். இந்த சவாலான காலங்களை அரசியல் எதிரிகளாகக் காட்டிலும் இந்தியர்களாக எடுத்துக் கொள்வது உண்மையான ராஜதர்மமாக இருக்கும்” என வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *