முகக்கவசம் இல்லாமல் ரயிலில் பயணித்தால் இனி 500 ரூபாய் அபராதம்

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால், இந்திய அரசு பல பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்தியுள்ளது. தமிழக அரசும் புதிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி மக்களை பாதுகாக்க முயன்று வருகிறது.
அதன்படி, பேருந்துகளில் இருக்கைகளில் ஐம்பது சதவீதம் பேர் மட்டும் தான் இருக்க வேண்டும் என கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால், ரயில் பயணங்களுக்கு இதுவரை எந்த பாதுகாப்பு வழிமுறைகளும் பின்பற்றப்படவில்லை.
இந்நிலையில், மத்திய ரயில்வே துறை இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். 2020, மே 11ம் தேதி ரயில்வே கொண்டு வந்த நிலையான வழிகாட்டல் விதிகளின்படி, ரயில்களில் பயணிக்கும் பயணிகளும், ரயில்நிலையத்துக்குள் வரும் பயணிகளும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாமல் ரயில்நிலையத்துக்குள்வரும் பயணிகள், உடன் வருவோர், மற்றும் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ரயில்வே சட்டத்தின்படி ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.
ரயில்களை அசுத்தப்படுத்துதல், ரயில்நிலையங்களில், ரயிலில் எச்சில் துப்புதல் தடை செய்யப்படுகிறது. கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
முகக்கவசம் அணியாமல் பயணித்தல், முகக்கவசம் அணியாமல் ரயில்நிலையத்துக்குள் வருதல், எச்சில் துப்புதல் போன்றவை அடுத்தவர்கள் உயிருக்கும், பொது சுகாதாரத்துக்கும் ஆபத்தை விளைவிக்கும் செயலாகும். ஆதலால், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு அடுத்த 6 மாதங்களுக்கும் அல்லது மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அனைத்து ரயில் பயணங்களுக்கும் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.