மருத்துவர் சைமனின் உடலை தோண்டி எடுக்க உயர் நீதிமன்றம் தடை
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பரவ ஆரம்பித்த காலத்தில் மருத்துவர்கள் உதவியால் தான் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது. மக்களுக்காக தங்கள் உயிரை பணயம் வைத்து பணிகளை செய்து வந்தனர்.
சில சமயங்களில் அந்த மருத்துவர்களுக்குக் கூட கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மரணமடைந்தனர். சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த மருத்துவர் சைமன் தனியார் மருத்துவமனையில், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றியவர். அவர் சிகிச்சை அளித்த நபர்களிடம் இருந்து, அவருக்கும் நோய் தொற்று ஏற்பட்டதால், கடந்த வருடம் ஏப்ரல் 19ம் தேதி காலமானார்.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவரது உடலை மயானத்தில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், அவரது உடல் வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
அவரது உடலை கீழ்பாக்கம் சிமெட்ரிஸ் போர்டு என்ற தனியார் கல்லறை இடத்தில் அடக்கம் செய்யவேண்டும் என அவரது மனைவி கோரிக்கை விடுத்தனர். ஆனால், தனியார் கல்லறை நிர்வாகம் மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மறுத்து விட்டது. ஆனால், தற்போது சைமன் உடலை தோண்டி எடுத்து அந்த கல்லறையில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அதில், கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் காலத்தில் மருத்துவர் சைமனின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் புதைப்பது தேவையா? என கேள்வி எழுப்பி இருந்தது. இதனையடுத்து, மருத்துவர் சைமன் உடலை தோண்டி எடுத்து மறு அடக்கம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.