தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா?

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்புகள் 2 லட்சம் என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதனால், புதிய பாதுகாப்பு நடைமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், கொரோனா பரவல் தொற்றுக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்களே தனித்தனியாக பாதுகாப்பு நடைமுறைகளை விதித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.

தமிழகத்திலும், கொரோனா பாதிப்பு உச்சமடைந்துள்ள நிலையில் பல புதிய கட்டுப்பாட்டு நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா பரவலால் இந்திய அளவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020 ஆம் ஆண்டைப் போல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழத்தில் முழு ஊரடங்கு அல்லது இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்படுமா? என தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதா கிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு , அவர், “குறித்து இப்போது என்னால் கூற முடியாது. தொற்று அதிகமாக உள்ள இடங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். அனைவரும் இரண்டு வாரங்களுக்கு முகக்கவசங்கள் அணிந்தால் தொற்றைக் குறைக்கலாம். அடுத்த இரண்டு வாரங்கள் தமிழகத்துக்கு கடினமான காலம். மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *