வேட்பாளர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை!
தமிழகமெங்கும் கொரோனாவின் கோரத் தாண்டவம் ஆரம்பமாகியுள்ளது. தேர்தல் பணிகளும் நடந்து வருவதால் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகமாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தென்காசியைச் சேர்ந்த வழக்குரைஞர் பால்ராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், “தேர்தல் பரப்புரைக்குச் சென்ற வேட்பாளர்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், பொது மக்களுக்கும் கொரோனா பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
இதனால், தேர்தலில் போட்டியிடும் 4, 512 வேட்பாளர்களுக்கும் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு உள்நோக்கத்துடன் அற்ப காரணங்களுக்காகத் தொடரப்பட்டுள்ளதாகக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும் மனுதாரருக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அடுத்த ஓராண்டுக்கு பொது நல வழக்குகள் தாக்கல் செய்ய மனுதாரருக்குத் தடை விதித்து உத்தரவிட்டனர்.