தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!
இந்தியாவில் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,64,511-ஐ கடந்துள்ளது. இது நாட்டின் மக்கள் தொகையின் மொத்த பாதிப்பில் 1.48 சதவீதமாகும். மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, தமிழகம் மற்றும் குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் 86.37 சதவீதம் பேர் 6 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை பிப்ரவரி 15-ம் தேதியிலிருந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 430 – 450 பேராக இருந்த நிலையில் கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கடந்த சில தினங்களாக தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 480 என்ற அளவில் உள்ளது. கொரோனா மீண்டும் அதிகரிப்பதற்கான காரணம் என்ன என்று அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர்.
கடந்த 27-ம் தேதி வெளியான அறிவிப்பின்படி, 16,752 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 8,623 பேருக்கும், கேரளாவில் 3,792 பேருக்கும், பஞ்சாப்பில் 593 பேருக்கும் புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களுடன், அமைச்சரவை செயலாளர் நேற்று உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடத்தினார். பின்னர், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவரமாக பின்பற்றும்படி அவர் ஆலோசனை கூறினார். தொற்று அதிகரிப்புக்கான காரணத்தை கண்டறிய, சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு உயர்நிலைக் குழுக்களையும் மத்திய அரசு அனுப்பியுள்ளது.