கண்ணாடி போட்டவர்களுக்கு கொரோனா வராதா?
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. ஒரு சமீபத்திய ஆய்வில், கண்ணாடி அணியும் நபர்கள் கண்களை குறைவாக தொடுவதால் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவது குறைவு என தெரியவந்துள்ளது.
இந்திய ஆராய்ச்சியாளர்கள் மெட்ராக்ஸிவ் என்ற இணையதளத்தில் இந்த ஆய்வு குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளனர், அதில், ”இந்த ஆய்விற்கு 304 பேர் அதாவது 223 ஆண்கள் மற்றும் 81 பெண்கள் உட்படுத்தப்பட்டனர். 10 முதல் 80 வயது நிரம்பிய இவர்கள் இரண்டு வாரங்களுக்கு மேலாக வட இந்தியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்த ஆய்விற்காக தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 19 சதவிகிதத்தினர் மட்டுமே பெரும்பாலான நேரங்களில் கண்ணாடி அணிந்திருப்பதாக கூறப்பட்டது.
மேலும், பங்கேற்பாளர்கள் சரியாக ஒரு மணி நேரத்தில் 23 முறை தங்கள் முகத்தைத் தொட்டனர் மற்றும் கண்கள் சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு மூன்று முறை தொடப்பட்டது” என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கண்ணாடி அணியும் நபர்கள் கோவிட் வைரஸால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து இரண்டு முதல் மூன்று மடங்கு குறைவாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
பொதுவாக, கொரோனா வைரஸ் கண்களைத் தேய்த்தல், அசுத்தமான கைகளால் மூக்கு அல்லது வாய் பகுதியைத் தொடுவதால் தான் பரவுகிறது என கூறப்படும் நிலையில், இந்த ஆய்வு முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. மேலும், எட்டு மணி நேரம் கண்ணாடி அணிபவர்களுக்கு வைரஸ் பாதிப்பு குறைவு என்றும் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன
முன்னதாக, டெய்லி மெயில் படி காண்டாக்ட் லென்ஸ்கள் அணிந்தவர்கள் கொரோனா வைரஸ் பரவலை தவிர்ப்பதற்காக கண்ணாடி அணியுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், நோய்த்தொற்று பரவுதலின் ஆரம்பக்காலத்தில்தான் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
அந்த சமயத்தில் கொடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களில் கை கழுவுதல் அல்லது உடல் ரீதியான தொலைவு பற்றிய தரவு எதுவுமில்லை. கோவிட் -19 நோயாளிகளுக்கும் பொது மக்களுக்கும் இடையில் கண்ணாடிகள் அணிவதில் காணப்பட்ட வேறுபாடு தற்செயலாக மட்டும் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே கண்ணாடி அணிபவர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை தரும் என்பதில் சந்தேகமில்லை.