300 ஜெட் விமானங்களை வாங்க ஏர் இந்தியா திட்டம்..!!
ஏர் இந்தியா நிறுவனம் 300 சிறிய வகை ஜெட் விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வர்த்தகப் பயன்பாட்டுக்காக ஏர் இந்தியா நிறுவனம் 300 விமானங்களை வாங்க இருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
இதற்காக விமான தயாரிப்பு நிறுவனங்களான ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் 300 விமானங்களை வாங்க 4 ஆயிரம் கோடி வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்காக ஏர்பஸ் மற்றும் போயிங்
நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தையின் முடிவில், ஏர் இந்தியா முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 300 விமானங்கள் அனைத்தும் கிடைப்பதற்கு 10 ஆண்டுகள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியாவை, இந்த ஆண்டின் தொடக்கத்தில் டாடா குழுமம் வாங்கியது குறிப்பிடத்தக்கது. சில தினங்களுக்கு முன்பு ஏர் இந்தியாவுடன், ஏர் ஆசியாவினை இணைக்க சிசிஐ ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இது ஏர் இந்தியாவின் மிகப் பெரிய திட்டம் என்றும் கூறப்படுகிறது.