பல்நோக்கு பயன்பாட்டுக்கு மாறும் ஃபாஸ்டேக்…
கடந்த, பிப்ரவரி 15 முதல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விரைவில் ஃபாஸ்டேக் அட்டை மூலம், பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி ஆகியவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும், விரைவில் பார்க்கிங் கட்டணத்தை செலுத்த ஃபாஸ்டேக்குகள் பயன்படுத்தப்படுத்தவும் வாய்ப்புள்ளது.
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண செலுத்த ஃபாஸ்டேக் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாகனங்களின் விண்டோ ஸ்கிரீனில் ஒட்டப்பட்டிருக்கும் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முறையாகும். சுங்கச்சாவடிகளை கடக்கும் போது அதனுடன் இணைக்கப்பட்ட ப்ரீபெய்ட் அல்லது சேமிப்புக் கணக்கிலிருந்து நேரடியாக கட்டணங்களை செலுத்துவதோடு, சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் அணிவகுத்து காத்திருப்பதை தவிர்க்க முடிகிறது.
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஃபாஸ்டேக்கை ஒரு பல்நோக்கு பயன்பாட்டு அட்டையாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து தொழில்நுட்ப சிக்கல்களையும் தீர்த்த பின்னரே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
பார்க்கிங் கட்டணம் செலுத்துவதற்கு ஃபாஸ்டேக்கைப் பயன்படுத்துவதற்கான பைலட் திட்டம், ஏற்கனவே ஹைதராபாத், பெங்களூர் விமான நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது. அதன் வெற்றிக்குப் பிறகு, இந்த சேவை டெல்லி விமான நிலையம் மற்றும் கொனாட் பிளேஸில் அடுத்த கட்டத்தில் தொடங்கப்படும் என மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அதேபோல் மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பல நகரங்களிலும் விரிவாக்கம் செய்ய மத்திய அரசு முனைப்பு காட்டி வருவதாக கூறப்படுகிறது.இதனிடையே, கிட்டத்தட்ட 80 சதவீத வாகனங்கள் ஃபாஸ்ட் டேக்-ன் உதவியுடன் கிட்டத்தட்ட பூஜ்ஜிய நேரத்தில் 770 டோல் பிளாசாக்களில் வரி செலுத்துகின்றன. மேலும் பாஸ்டேக் காரணமாக மற்ற வாகனங்கள் மீதமுள்ள டோல் பிளாசாக்களில் கிட்டத்தட்ட 150 வினாடிகள் செலவிடுகின்றன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.