விநியோக சேவைகளுக்காக 25,000 க்கும் மேற்பட்ட மின் வாகனங்களை வாங்க பிளிப்கார்ட் முடிவு!

வால்மாா்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான இணையவழி வா்த்த நிறுவனமான பிளிப்காா்ட், தனது விநியோக சேவைகளுக்காக 25,000 க்கும் மேற்பட்ட மின் வாகனங்களை வாங்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2030-ஆம் ஆண்டுக்குள் எங்களது விநியோகக் கட்டமைப்பில் மின்சாரத்தில் இயங்கக் கூடிய 25,000 வாகனங்களை இணைக்க முடிவு செய்துள்ளோம்.
அதற்காக, ஹீரோ எலக்ட்ரிக், மஹிந்திரா எலக்ட்ரிக் மற்றும் பியாஜியோ உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய மின் வாகனத் தயாரிப்பாளா்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம்.
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து நகரங்களிலும், விநியோகத்துக்கான வாகனங்களை மின் வாகனங்களாக மாற்றும் திட்டத்தின் முதல் கட்டமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.