சாதிப் படங்கள் சாதித்தனவா..? – கணேசகுமாரன்

பாரதி கண்ணம்மாவுக்கு முன்பிருந்தே பல நூறு படங்கள் சாதிக் கொடுமையைப் பற்றி கதறியிருந்தாலும் இன்னும் கதறிக்கொண்டிருந்தாலும் தினந்தோறும் ஒரு ஆணவக்கொலை செய்தியை செய்தித் தாள்களில் படித்துவிட முடிகிறது. சாதிக் கொடுமைகளைப் பேசிய படங்கள் மறுபுறம் சாதிப் பெருமையை மட்டும்தான் பேசியதா… சில சினிமாக்கள்.

பாரதி கண்ணம்மா – நேரடியாகவே தேவன்கள் ஒண்ணும் கோழைங்க இல்லடா என்ற படம். அடக்குமுறைக்கும் ஒடுக்கப்பட்ட மனங்களுக்கும் இடையேயான வலியை கொஞ்சம் நாகரீகமாக சொன்ன படம். சாதி வெறியரான தன் அப்பா விஜயகுமாரைத் திருத்துகிறேன் பேர்வழி என்று கிளம்பும் மீனாவுக்கு கிடைக்கும் பதிலடி மூலமாக நகரும் காட்சிகள் பார்வையாளனுக்கு தேவையானதைத் தந்துவிடும். வெள்ளச்சாமி தேவன் ரத்தத்துக்குப் பிறந்த கண்ணம்மாவின் முடிவு பார்வையாளன் மனதில் பெரும் ஊசியாய் தைத்தது. அடிமைகள் தரும் மரியாதைச் சுகத்துக்குப் பழகிப்போன ஆண்டைகளின் மன இயல்பை துல்லியமாக வெளிப்படுத்தியிருப்பார் விஜயகுமார். விசுவாசத்துக்கும் காதலுக்கும் நடுவில் சாதியை வைத்துக்கொண்டு தவிக்கும் கதாபாத்திரத்தில் பார்த்திபன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். நிஜம் புரிந்தும் கொண்ட உண்மையான நேசத்துக்கும் தந்தையின் சாதிவெறிக்கும் இடையில் தவிப்பை வெளிப்படுத்தியிருப்பார் மீனா. ஆதிக்க சாதியின் அநியாயங்களை ரஞ்சித் கேரக்டர் மூலம் சொல்லியிருப்பார் இயக்குநர் சேரன். உடன்கட்டையை மாற்றிப்போட்ட அந்த க்ளைமாக்ஸ் நிஜமாகவே அதிர்வைத் தந்தது. ஆனால் கடைசிவரையிலும் அந்த ஊர் தேவர் பாளையமாகத்தான் இருந்தது.

பரியேறும் பெருமாள் – தமிழ் சினிமாவுக்கு புதிய வண்ணத்தைப் பூசிய படம். சாதி வன்மத்தை வலிக்க வலிக்க சொன்ன படம். அசல் வலியை அவமானத்தை குரூரத்தை எவ்வித பூச்சும் இல்லாமல் சொன்ன படம். எங்கோ ஒரு பரியனுக்கு நிகழ்ந்த கொடுமையாக எண்ணாமல் ஊரெங்கும் உள்ள பரியன்களை அடையாளம் காட்டிய படம். கூடவே இயக்குநர் காட்டிய அந்த மக்களின் பின்னணி… மனதுக்கு நெருக்கமானவர்களிடம் இவ்வளவு மன வலியா என யோசிக்க வைத்தது. களம் மிகப் புதியதாய் இருந்தது. நம்முடனே இருக்கும் மக்கள் இத்தனை வலியுடனா வாழ்ந்து வந்தார்கள் என்று பதற வைத்தது பரியேறும் பெருமாள். இதிலும் ஆதிக்க சாதிப் பெண்ணுடனான காதல், அதனால் ஏற்படும் விளைவுகள்தான். ஆனால் காட்டப்பட்ட காட்சிகளோ வேறொன்றாய் இருந்தது. எல்லா மாற்றங்களுடன் முன்னேறிக் கொண்டிருக்கும் ஒரு சாதியைச் சேர்ந்த நாயகன் மாறவேண்டியது ஆதிக்க சாதிதான் என்ற க்ளைமாக்ஸ் பதில்தான் இன்னும் எவ்வளவு நாளைக்கு என்ற கேள்வியை எழுப்பியது. இன்னொரு புறம் பல தடைகள் கடந்து முன்னேறி வந்துகொண்டிருக்கும் சமூகத்திடம் நாம் எப்படி அடிமைப்பட்டு இருந்தோம் தெரியுமா என ஞாபகப்படுத்தி குளிர் காயத்தான் வேண்டுமா என்றொரு கேள்வியும் முளைத்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த வலியை நாடு முழுவதும் பரவவிட்டது பரியேறும் பெருமாள்.

மதயானைக் கூட்டம் – பல ஆச்சரியங்களை உள்ளடக்கிய படம். இப்படத்தின் தயாரிப்பாளர் ஜி.வி. பிரகாஷ். ஆனால் படத்தின் இசைக்கு ஏன் என். ஆர். ரகுநந்தன் என்று சின்னச் சின்னதாய் தொடங்கும் ஆச்சரியம் படம் முழுவதும் நீடிக்கும். ஜெயக்கோடி தேவரின் மரணத்தில் தொடங்கும் படம் தொடர்ச்சியான அறிமுகங்களில் சூடு பிடிக்கும். இவர்கள் இப்படித்தான் என்பதில் எவ்வித காம்ப்ரமைஸும் காட்டாமல் துணிச்சலாகப் படம் பிடித்திருப்பார் இயக்குநர் விக்ரம் சுகுமாரன். தாய்மாமனாக வேல. ராமமூர்த்தி அந்தக் கேரக்டருக்காகவே பிறந்தது போல் வாழ்ந்திருப்பார். இரண்டாம் தார பெருமை, இருந்தும் இரண்டாவது வீட்டில் கை நனைக்க மறுக்கும் சொந்தங்கள், தேவ்னு பேரு இருக்கு கபில்தேவ் நம்மாளுங்களா என அனைத்திலும் சாதி பார்க்கும் மனிதர்கள், சற்றே நிறம் மாற்றி குளிர் பூசும் ஓவியா கதிர் காதல் போர்ஷன், முதல் பட சாயல் தெரியாமல் கதிரின் நடிப்பு என அனைத்தும் சிறப்பான ஒரு சினிமா. ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் ஒன்றை ஒன்று கைகோர்க்க முதல் பாதி செல்லும் வேகம் அலாதி. இவ்வளவு இருந்தும் படம் இன்னொரு சாதியின் மீதான எந்த விமர்சனமும் வைக்கவில்லை. சொல்லப்போனால் தேவர் சாதியின் சம்பிரதாய சடங்குகளை ரத்தமும் சதையுமாக அவர்களின் துயர சந்தோசத்தோடு பழி வாங்கும் வெறியோடு சொன்ன படம்தான் மதயானைக் கூட்டம். வெளிப்படையாய் பிற சாதி குறித்து படத்தில் பேசாவிட்டாலும் படம் பேசிய சாதி வெளிப்பாடு விவாதத்துக்கு உரியதே.

வேதம் புதிது – இயக்குநர் பாரதிராஜாவின் பெரும்பாலான படங்கள் குறிப்பிட்ட சாதியின் பெருமையை மகிழ்வை துயரைப் பதிவு செய்பவைதான். அதை மீறி பார்த்தால் கழுத்திலிருக்கும் பூநூலை, சிலுவையை அறுத்து எறிந்துவிட்டால் மத வெறியை காணாமல் செய்துவிடலாம் என்ற யதார்த்தம் தாண்டிய இயல்பு குலைத்த அதீத கற்பனைக்குள்ளான கதைதான். வேதம் புதிது திரைப்படத்தில் இயக்குநர் எடுத்துக்கொண்டது பிராமண சாதிப் பெண்ணுக்கும் தேவர் வீட்டு பையனுக்கும் இடையிலான காதல். காதலின் காட்சிகளைப் படம் பிடிப்பது என்றால் பாரதிராஜாவுக்கு கேப்பைக்களி தின்பது போல். அமலாவுக்கும் ராஜாவுக்குமான காதல் காட்சியில் இருந்த இயல்பு சாதி ரீதியான காட்சிகளில் இல்லை. வலிய திணித்த வசனங்களும் அபத்தமாய்தான் தெரிந்தன. நான் கரை ஏறிட்டேன் நீங்க ஏறலையா என சத்யராஜைப் பார்த்து கேள்வி கேட்கும் பிராமணச் சிறுவனின் நெற்றி பட்டையும் கழுத்து பூநூலும் உச்சிக் குடுமியும் முன்னுக்குப் பின் முரணாகத்தான் தெரிந்தன. அதிலும் மாமிசம் சாப்பிடும் தெய்வ நம்பிக்கை இல்லாத சத்யராஜை மிக நல்லவராகவும் கடவுளுக்கு பூஜை செய்யும் அய்யர் சாருஹாசனை சற்றே திமிர் கொண்டவராகவும் இயலாதவராகவும் நேரடியாகக் காட்டியிருப்பார். ராஜா, சாருஹாசன் இறப்புக்குப் பிறகு படம் இன்னொரு ட்ராக்கில் பயணம் செய்யத் தொடங்கும். பிராமணன் ஒருவன் பிற சாதிக்காரனுக்கு கொள்ளி வைப்பது வரைதான் பாரதிராஜாவால் சிந்திக்க முடிந்தது.

கழுவேர்த்தி மூர்க்கன் – சாதி அரசியலை என்ன செய்கிறது அரசியலில் என்ன செய்கிறது என்பதை சற்று விறுவிறுப்புடன் சொன்ன படம் கழுவேர்த்தி மூர்க்கன். எங்கள அடுத்த இடத்துக்கு கூட்டிப் போகாட்டியும் 50 வருசத்துக்கு பின்னாடி தள்ளிடாதீங்க என அடிபட்ட வலியுடன் ஒரு குரலும் நல்லவனா கெட்டவனா பார்த்து யாரும் ஓட்டு போடுறதில்ல… நம்ம சாதியான்னு பாத்துதான் ஓட்டு போடுறாங்க என ஆதிக்க குரலும் பேசிய படம் இரண்டாம் பாதியில் அப்படியே மாறி பழைய மலையூர் மம்பட்டியான் கழுகுமலைக்கள்ளன் சாயலில் போய் முடிந்தது சற்றே பரிதாபம். இருந்தாலும் நம்பிக்கை தந்தார் இயக்குநர் கெளதமராஜ்.

ஒரு சினிமாவாக எல்லாவிதத்திலும் பெஸ்ட்டைத் தந்திருக்கும் விருமாண்டியும் தேவர் மகனும் சாதிப் படம் என்பதையும் தாண்டி நல்ல படங்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *