பழசும் புதுசும் – ரீமேக் ரீல்ஸ் – கணேசகுமாரன்

பிறமொழி படங்களின் மொழி மாற்று உரிமை பெற்று தமிழில் எடுக்கப்படும் படங்கள் ஹிட்டாகவும் வாய்ப்புண்டு. ஒரிஜினலோடு விட்டிருக்கலாமே என்று கதற வைப்பதும் உண்டு. ஆனால் தமிழில் வந்து ஹிட்டான படங்களையே மீண்டும் எடுத்து கெடுத்து வைப்பதும் உண்டு. வெற்றி பெற வைப்பதும் உண்டு. அப்படி தமிழுக்குள்ளேயே ரீமேக்கான சில படங்களின் குறிப்பு இங்கே.

பில்லா – ரஜினிகாந்த் நடிப்பிலும் அஜித் நடிப்பிலுமாய் வெளிவந்த படம் பில்லா. 1980 ல் வெளியான ரஜினியின் பில்லாவில் ஸ்ரீபிரியா, பாலாஜி போன்றவர்கள் நடித்திருந்தனர். எம் எஸ் விஸ்வநாதன் இசையில் வெளியான இப்படம் ரஜினிகாந்தின் கேரியரில் மிக முக்கியமான படம். கடத்தல் தொழில் புரியும் டானின் வாழ்க்கையை கமர்ஷியல் பேக்கேஜில் பக்காவாகத் தந்து ஹிட்டடித்தார்கள்.

அதே கதையை இப்போதுள்ள டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப ஒளிப்பதிவு இசை என மாடர்னாக ஸ்டைலிசாக தந்தார் இயக்குநர் விஷ்ணுவர்தன். அஜித்தின் சினிமா கேரியரை வேறு ஒரு தளத்துக்கு மாற்றி வைத்தது 2007 ல் வெளிவந்த இந்தப் படம். கதையை மட்டும் இல்லாமல் பழைய பில்லா படத்தின் சூப்பர் ஹிட் பாடலான வெத்தலைய போட்டேன்டி பாடலையும் யுவனின் இசையில் நவீனமாக்கி ரசிகர்களுக்கு விருந்தளித்தார் இயக்குநர். ரஜினியின் ஸ்டைல் லுக் முந்தைய படத்துக்கு எத்தனை ப்ளஸ்ஸாக இருந்ததோ அதற்குச் சற்றும் குறையாமல் புதிய பில்லாவில் அஜித்தின் ஸ்டைல் லுக் இருந்தது. இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் படங்கள்தான். காரணம் ஒரிஜினலின் ஹிட்டுக்கு காரணமான எதையும் புதிய இயக்குநர் மாற்றவில்லை. ஆதாரக் கருவை சிதைக்காமல் ரசிகர்களின் பல்ஸ் பிடித்து படம் எடுத்ததால் புதிய கோப்பையில் பழைய ஒயினை நிரம்பவே ருசித்தார்கள் ரசிகர்கள்.

தில்லுமுல்லு – இதுவும் ரஜினி படம்தான். இரு வேடங்களில் வெரைட்டி காட்டிய ரஜினியின் நடிப்புக்கு சிரித்துக்கொண்டே கைத்தட்டினார்கள் ரசிகர்கள். 1981 ல் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான இந்தப் படத்தை 2013 ல் சிவாவை ஹீரோவாக நடிக்க வைத்து சொதப்பினார்கள். ஆக்‌ஷன் ஹீரோவான ரஜினியின் காமெடியை மிக விரும்பி ரசித்தார்கள். அதிலும் ரஜினியின் ஸ்டைல் அல்டிமேட்.

ஆனால் காமெடி என்ற பெயரில் எவ்வித ரசத்தையும் வெளிப்படுத்தாத சிவாவை அவ்வளவு எளிதில் பொருத்திப் பார்க்க முடியவில்லை. இசைக்கு எம் எஸ் வியுடன் யுவனும் இணைந்தும் சிறக்கவில்லை. பழைய படத்தின் சாயலுக்கு ராகங்கள் பதினாறு என்ற முந்தைய ஹிட் பாடலையும் இதில் இணைத்துள்ளார்கள். கை கொடுக்கவில்லை. இன்னொன்று தேங்காய் சீனிவாசன். அவரின் உடல்மொழி வெளிப்பாடும் நகைச்சுவை வசன வெளிப்பாடும் படத்துக்கு பெரும் பலமாய் இருந்தது. என்னதான் பிரகாஷ் ராஜ் அந்த கேரக்டரில் சிறப்பாய் நடித்திருந்தாலும் பலதரப்பட்ட கேரக்டரில் தனது முத்திரையைப் பதித்திருந்த பிரகாஷ் ராஜின் அப்பாவி கதாபாத்திரம் அவ்வளவாக மக்கள் மனதில் பதியவில்லை. ஒரிஜினல் ஒரிஜினல்தான் என்று நிரூபித்த படம்.

காசேதான் கடவுளடா – ஒரு கறுப்பு வெள்ளை க்ளாசிக்கல் சினிமாவை எந்த அளவுக்கு சிதைக்க முடியுமோ அந்த அளவுக்கு கொடுமைப் படுத்தியிருந்தார்கள் புதிய காசேதான் கடவுளடாவில். பழைய காகவிலிருந்து கதையை மட்டும் எடுத்துக்கொண்டு கொஞ்சமாய் மாற்றியிருந்தார்கள். ஆனால் கொஞ்ச நஞ்சமா பாடு படுத்தினார்கள். முதலில் கதாபாத்திர தேர்விலேயே மொத்தமாய் கோட்டை விட்டிருந்தார்கள்.

மனோரமா இடத்தில் ஊர்வசி, வெண்ணிற ஆடை மூர்த்தி இடத்தில் தலைவாசல் விஜய் என ஆரம்பமே சொதப்பல். அதைவிட சகிக்க முடியாத ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று தேங்காய் சீனிவாசன் ஏற்றிருந்த அல்டிமேட் கேரக்டரில் யோகிபாபு செய்த கொடுமைகள். முதல் கறுப்பு வெள்ளை ஒரிஜினலை மறக்காமல் இருக்க ஒரே வழி புதிய கலர் இம்சையை பார்க்காமல் இருப்பதே.

மாப்பிள்ளை – இதுவும் ரஜினி படம். ஒரு தீபாவளிக்கு வெளியாகி வசூலில் பட்டாசு கொளுத்திய படம். பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. பின்னாளில் ரஜினிகாந்தின் மருமகனாகிவிட்ட தனுஷ் தனது சினிமா மார்க்கெட்டை வலுப்படுத்த தனது மாமனார் ரஜினிகாந்தின் படத் தலைப்புகளில் படங்கள் நடிக்கத் தொடங்கினார்.

தலைப்பு மட்டும் எதற்கு… படத்தையே ரீமேக் செய்யலாம் என்று எடுக்கப்பட்ட இப்படமும் வசூல் ரீதியாக ஏமாற்றவில்லை. இளையராஜாவின் பாடல்கள் பெரிய ப்ளஸ் என்றாலும் மணிஷர்மாவின் புதிய இசையும் ஏமாற்றவில்லை. ராஜாவின் இசையில் மலேசியாவின் சூப்பர் ஹிட்டான என்னோட ராசி நல்ல ராசி பாடலை இதிலும் உபயோகித்திருந்தார்கள் வேறொரு பாடகரை வைத்து. ஏமாற்றவில்லை. மாமியாராக ஸ்ரீவித்யாவின் கம்பீரம் மனிஷாவிடம் மிஸ்ஸாகியிருந்தாலும் குறையில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *