கேரளா க்ரைம் ஃபைல்ஸ் – வழவழ கொழகொழ திரில்லர் – கணேசகுமாரன்

ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் வெப்சீரிஸ் கேரளா க்ரைம் ஃபைல்ஸ். முதன்மை கதாபாத்திரங்களாக லாலும் அஜு வர்கீஸும் நடித்திருக்கிறார்கள். பொதுவாக ஒரு க்ரைம் திரில்லருக்கான அத்தனை தொடக்கத்துடன் ஆரம்பிக்கும் தொடர் முதல் எபிசோடின் இறுதியிலேயே கொலையாளியின் பெயரை பார்வையாளனுக்கு அறிவித்து விடுகிறது. பின்பு அந்தப் பெயரைப் பிடித்துக்கொண்டு மூன்று எபிசோடுகளைக் கடக்கிறார்கள். பார்வையாளனுக்குதான் எரிச்சல் மண்டுகிறது.

ஒரு கொலை நிகழ்ந்திருக்கிறது. அதற்கான மோட்டிவ், எதற்காக கொலை, யார் கொலையாளி என்ற அனுமானங்கள் என நகரவேண்டிய ஒரு வழக்கு அதற்கு எவ்விதத்திலும் சம்பந்தமில்லாத காட்சிகளுடன் நகர்கிறது. அப்துல் வஹாப்பின் இசை திரில்லருக்கான மூடை எல்லாவிதத்திலும் ஏற்றுகிறது. ஜிதினின் கேமரா திகிலுக்கான விறுவிறுப்பை வழங்கி நியாயம் செய்கிறது.

என்னதான் யூனிபார்ம் போட்டு முகத்தை இறுக்கமாகக் காட்டினாலும் அஜு வர்கீஸின் உயரமும் உருவமும் சீரியஸ் போலீஸ் தோற்றத்தை வெளிப்படுத்தவில்லை. பத்து பொங்கல் சாப்பிட்டு பாத்ரூம் போகாத முகத்துடனே வலம் வருகிறார். உயர் அதிகாரியாக லால் கச்சிதம். சரத்தாக வரும் ஹரிசங்கர் கவனிக்க வைக்கிறார். சரத் முதல்நாள் நடந்ததை ஒரே ஷாட்டில் காட்டிய எடிட்டிங் வித்தைக்கு சபாஷ்.

கொலை வழக்கு பரபர விறுவிறு காட்சிகள் இல்லாமலே வழவழா கொழகொழாவென மெதுவாக தன் போக்குக்கு நகர்கிறது. ஒரு கட்டத்தில் ஒன்றாம் எபிசோடிலிருந்து ஏன் கதையை லால் வாய்ஸில் ரீவைண்ட் செய்கிறார் என்றும் தெரியவில்லை. தேவையற்ற பல காட்சிகள் கதையின் சுவாரசியத்தை காலி செய்கின்றன. எதற்கு அந்த ஒயின் ஷாப் திருட்டு, எதற்கு மற்ற இரண்டு போலீஸ்காரர்களின் நெஞ்சுருக்கும் கதை, லாலின் பின்னிருக்கும் பரிதாபக் கதை என கதையை வளர்த்த மட்டுமே தேவையற்ற திணிப்புகள். போலீஸ்காரர்களின் கஷ்டத்தைக் காட்டுகிறோமென்று பின்னால் வாய்ஸ் ஓவரில் சொன்னாலும் எதுவும் மெயின் கதைக்கு தேவைப்படாமல் அநாவசிய திணிப்பு.

கொலையாளி சைக்கோ என்கிறார்கள். அதற்கான எந்த அறிகுறியும் படத்தில் காட்டப்படவில்லை. அந்த பஸ்ஸில் நடக்கும் செயின் திருட்டும் அதன்பின்னான போலீஸ் ஸ்டேசன் காட்சியின் விளக்கமும் ஆடியன்ஸுக்கு புரிவதற்குள்ளே வெப்சீரிஸ் முடிந்துவிடுகிறது.

ரெண்டே முக்கால் மணி நேரத்திலேயே முடிந்துவிடுகிறது வெப்சீரிஸ். கடைசி பத்தாவது நிமிடத்தில் தலை காட்ட வைத்திருக்கும் கொலையாளியின் என்ட்ரிக்காக வேண்டுமானால் இயக்குநரைப் பாராட்டலாம். கொலைக்கான காரணம் தெரியும்போது சப்பென்று போய் இதெல்லாம் ஒரு கொலை, இதெல்லாம் ஒரு கேஸ் என்று கோபம்தான் வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *